(எப்.அய்னா)
அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட போது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் மட்டும் இடைநிறுத்தப்பட்டமையானது, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் பாராளுமன்றத்திலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அம்மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்படாமையால், அவர்கள் பெறும் மன உலைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
உண்மையில் இந்த விடயத்தை சிறு விடயமாக கருதி கை கழுவி விட முடியாது.
இந்த விடயத்தில் பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகள், புனித ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொறுப்பதிகாரி மற்றும் மூதூரை சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை குறித்து பாரிய சந்தேகங்கள் எழுப்பட்டுள்ளன. எனவே அது தொடர்பில் நியாயமான பிரத்தியேக விசாரணைகள் அவசியமாகும்.
திருகோணமலை நகரில் உள்ள பழைமை வாய்ந்த பாடசாலைகளை விட, குறிப்பாக ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில், கடந்த 10 வருட காலமாக குறைந்தபட்சம் 10 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவத்துறையிலும், பொறியியல் துறைக்கும் தேர்வாகி வரும் நிலையில், இந்த செயல் கல்லூரி மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக பாடசாலை சமூகத்தினால் நோக்கப்படுகின்றது.
இம்முறை கூட 04 மாணவிகள் பொறியியல் துறைக்கும், 09 இற்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவத் துறைக்கும் தெரிவு செய்யப்படுவார்கள் என்று கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருந்த்ததாக கூறப்படுகின்றது.
இதனைவிட, இந்த விடயத்தில் கல்வித் திணைக்களத்தினால், கல்லூரி அதிபருக்கும் 70 மாணவிகளுக்கும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது, மேலதிக பரீட்சை பொறுப்பதிகாரி நடந்துகொண்ட விதம் தொடர்பாக, மாணவிகள் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை குழுவுக்கு முன்வைத்துள்ளனர்.
பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பரீட்சார்த்திகளுக்கு சாப்பிடுவதற்கு கச்சான் - கடலை வழங்கியதாகவும், பர்தாவும் துப்பட்டாவும் அணிந்திருந்த மாணவிகள் அனைவரினதும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரமாட்டாது என்பதனை, பல சந்தர்ப்பங்களில் பரீட்சை மேலதிக பொறுப்பதிகாரி கூறி வந்ததாகவும், இதனால் பரீட்சையில் தோற்றிய மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், கல்வித் திணைக்கள சட்ட நடவடிக்கை குழு முன்னிலையில் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக மாணவிகள் சார்பில் சொல்லபப்டுகின்றது.
மேலும், கல்வித் திணைக்கள விசாரணை குழுவினர், ஒவ்வொரு மாணவியரிடமும் அவர்களின் வாக்குமூலங்களை எழுதுவதற்கு முன்னர், திருமலை வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்த சிலர் அவர்கள் சொல்வதை முதலில் எழுதச் சொன்னதாகவும், அதன் பின்னர், வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட நிலையில், வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கூறுவதையே முடிவாக எழுதச்சொல்லி மாணவிகளை பணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர், “ஒவ்வொருவரும் சுயமாக எழுத்துமூலம், வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். இதில் சிலருக்கு பரீட்சை பெறுபேறுகள் வரமாட்டாது” என்றும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மாணவிகளால் குற்றம் சாட்டப்படும் மேலதிக பரீட்சை மண்டப அதிகாரியை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சி என்ற குற்றச்சாட்டும் பிரதேச முஸ்லிம் அரசியல் தலைமைகளாலும் பாடசாலை சமூகத்தினராலும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
குறித்த 70 மாணவிகளின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயமானது அரசியல் நகர்வுகள் ஊடாக தீர்க்கப்பட முயற்சிக்கப்படும் நிலையில், இதனை முற்றாக அரசியலாக்காமல் முஸ்லிம் சமூகத்தின் உரிமையை உறுதி செய்யும் விடயமாக சட்ட ரீதியாகவும் அனுக முயற்சிக்கப்படல் வேண்டும்.
குறிப்பாக இத்தனை அநீதிகள் நடந்தும் 70 மாணவிகளும் குறைந்தபட்சம் மனித உரிமைகள் ஆணைக் குழுவிலேனும் முறையிட்டு தமது சட்ட உரிமைகளை பயன்படுத்த முயற்சிக்காமை கவலைக்குரியது.
குறிப்பாக பாடசாலை சீருடையுடன் பரீட்சை எழுதியவர்களை அச்சீருடையின் கலாசார அங்கத்தை முன்னிறுத்தி, மன உலைச்சலுக்கு உள்ளாக்கி அவர்களது பெறுபேறுகளை நிறுத்தி வைத்துள்ளமை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயற்பாடு. இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படாத விடத்து, அல்லது இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படாத விடத்து நாளை மற்றொரு பகுதியில் இதனை ஒத்த விடயங்கள் நடக்கலாம்.
ஏனெனில் நாம் பரீட்சை காலங்களில், இவ்வாரு ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதும் மாணவியருக்கு கொடுக்கப்படும் இடையூறுகள் தொடர்பில் வெறும் செய்திகளோடு நின்று விடுகின்றோம். அப்படி அல்லாமல், முஸ்லிம் சமூகம் தமது கலாசார உரிமையை அனுபவிக்க அவ்வாறான உரிமைகளுக்காக சட்ட ரீதியாக கட்டளைகளை பெற்றுக்கொள்ளும் போது அது எதிர்கால கசப்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.
எனவே தான் இந்த விவகாரத்தில், கல்வி அமைச்சர், அதிகாரிகளுடன் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக அல்லது வேறு வழிகளில் பேச்சுக்கள் நடாத்தும் அதே நேரம், இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், மனித உரிமை ஆணைக் குழுவில் முறையிடவோ அல்லது மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்து எழுத்தாணை ஒன்றினை பெற்று பரீட்சை பெறுபேறுகளை வெளியிடச் செய்யவோ முயற்சிக்க வேண்டும்.
இதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள சட்டத்தரணிகள் தயாராகவே இருக்கும் நிலையில், பாதிக்கப்ப்ட்டவர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க பின்னிற்கக் கூடாது.
அத்தோடு பெறுபேறுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்பட்ட இழப்புக்களுக்காக அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் ஊடாக நிவாரணம் பெறவும் முயற்சிக்கப்படல் வேண்டும்.
அப்போது தான் நாளை இன்னுமொரு முஸ்லிம் சகோதரிக்கு அவரது கலாசார ஆடையுடன் பரீட்சை எழுதும் போது, ஆடையை மையப்படுத்தி தேவையற்ற இடையூறுகளை செய்ய இன்னுமொருவர் இரு முறை யோசிப்பார்.