Our Feeds


Tuesday, June 4, 2024

ShortNews Admin

டெங்கு தொற்றுநோயாக உருவெடுக்கும் அபாயம்: உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அறிவித்தல்



டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடத்தின் மே மாதத்திலிருந்து வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு தொற்றுநோயாக உருவெடுக்கக் கூடும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தற்போது பெய்து வரும் கன மழையுடன் இந்த தொற்று நிலைமை ஏற்படக்கூடும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.


கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதன்படி, கடந்த வாரத்தில் டெங்கு அபாயத்துடன் கூடிய 15 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


அந்த 15 மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், புத்தளம், பதுளை, இரத்தினபுரி, கேகாலை போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன.


மேலும், டெங்கு அபாய வலயங்களாக 71 பிரிவுகள் சுகாதார வைத்திய அதிகாரியினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.


இந்த வருடத்தில் இதுவரை 24,920 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.


அத்துடன், இம்மாதத்தின் கடந்த இரண்டு நாட்களில் 106 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


மே மாதம் 26ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் 93,974 நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்காணிக்கப்பட்டதாகவும், அவற்றில் 28,310 நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


மேலும், 3121 பேருக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


தற்போதைய மழை நிலைமை காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்பு வாரத்திற்கு மேலதிகமாக எதிர்காலத்தில் ஓரிரு வாரங்களுக்கு இவ்வாறான துப்புரவு மற்றும் புகையூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.


மேலும் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »