Our Feeds


Monday, June 10, 2024

ShortNews Admin

தேர்தலுக்குப் பிறகு பங்களாதேஷத்திற்கு விஜயம் செய்வேன் - ஜனாதிபதி ரனில் உறுதி!



இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்தார்.


புதுடெல்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையில் இன்று (10) இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை போதே பங்களாதேஷ் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


கூட்டுறவு முறையின் அடிப்படையில் பங்களாதேஷில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை ஆராய்ந்து இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக இலங்கை விவசாயத்துறை நிபுணர்கள் குழுவொன்றை பங்களாதேஷிற்கு அனுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்தார்.


பங்களாதேஷிற்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியதோடு, இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்ததன் பின்னர் பங்களாதேஷுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.


பங்களாதேஷின் தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் பங்களாதேஷ் பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்தார்.


இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை மேற்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.


இதேவேளை, பங்களாதேஷில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பங்களாதேஷ் பிரதமர் அழைப்பு விடுத்தார்.


தேர்தலின் பின்னர் பங்களாதேஷுக்கு விஜயம் செய்வதாகவும் பங்களாதேஷ் பிரதமரிடம் ஜனாதிபதி உறுதியளித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »