தேசிய சுதந்திர முன்னணி, மவ்பிம ஜனதா கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, யுதுகம தேசிய அமைப்பு மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் புதிய கூட்டணியான 'சர்வஜன அதிகாரம்' (Sarvajana Balaya) உத்தேச மின்சார கட்டணத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (05) அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மின்சாரச் சட்டத்தின் மூலம் மின்சார சபை ஒழிக்கப்படும் எனவும், வெளிநாடுகளில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இலங்கையின் எரிசக்தி அமைப்பை இந்தியாவின் எரிசக்தி அமைப்புடன் ஒருங்கிணைக்க முடியும் எனவும், பின்னர் இலங்கையின் மின்சாரம் இந்த அமைப்பு இந்தியாவின் தயவில் செயல்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை பாதுகாக்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நாட்டில், அந்த சட்ட விதிகளை கூட நீக்கி விட்டு முழுவதையும் தனியார் மயமாக்குவதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு கூட ஆபத்து ஏற்படும் என்பது மிக தெளிவாக உள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.