Our Feeds


Thursday, July 11, 2024

Sri Lanka

கிளப் வசந்த படுகொலை - வாக்குமூலம் வழங்கிய துலான்!


கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வசந்த பெரேராவின் கொலைக்காக பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலானை, லொக்கு பெட்டி, கைக்கூலியாக பயன்படுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த  8ஆம் திகதி அதுருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உயிரிழந்தார்.

அப்போது பிரபல பாடகர் கே. சுஜீவாவின் கணவரான நயன வசுலவும் மரணமடைந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி சுஜீவா, மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணைகளின்படி, பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் துலான் சஞ்சுல, மகேஷ் என்ற நபர் மூலம் துபாயில் உள்ள லொகு பெட்டியுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருந்ததாகவும், அந்த உறவின் ஊடாக  அத்துரிகிரியவில் பச்சை குத்தும் நிலையத்தை திறப்பதற்காக இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் சந்தேக நபர், பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தின்படி, பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுலவும், கிளப் வசந்தவும் சம்பவ தினத்தன்றே முதல்முறையாக சந்தித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், புதிய பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவிற்கு துலான் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்ததால், அங்கு இப்படியொரு கொலை நடக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பொலிஸார் கருதுகின்றனர்.

தற்போது, ​​அவரது மனைவியும் அந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும், துலானின் தாயாருக்கு எதிரான போதைப்பொருள் தொடர்பான இரண்டு வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இருப்பினும், லொக்கு பெட்டியுன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அவர் துலானை எச்சரித்ததாக அவரது வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஏனைய ஆறு சந்தேக நபர்களும் பல்வேறு வழிகளில் இதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளிகள் வந்த காரை சம்பவத்தன்று அதிகாலை மூன்று மணியளவில் கடுவலை கல்பொத்த வீதிக்கு துலானுக்கு  லொக்கு பெட்டியை அறிமுகம் செய்த மகேஷ் கொண்டு வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த காரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார்.

கொலையாளிகள் விட்டுச் சென்ற வேன், குத்தகைக்கு பணம் செலுத்தாததற்காக பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், லொக்கு பெட்டியின் ஆலோசனையின் பேரில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பெலியத்தையில் உள்ள ஒருவரிடம் அது ஒப்படைக்கப்பட்டது.

அதை பொறுப்பில் வைத்துக் கொள்ள ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வேனின் பெட்டரி இறங்காமல் இருக்க தினமும் ஒருமுறை வேனை ஸ்டார்ட் செய்வதுதான் அவரது கடமையாகும்.

அந்த சந்தேகநபர்கள் அனைவரும் கொலையாளிகளுக்கு தேவையான வாகனங்களை வழங்குவதற்கும் அவர்களின் ஒருங்கிணைப்புக்கும் இடைநிலை உதவியாளர்கள் என்பதுடன், இரண்டு கொலையாளிகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், அவர்கள் அனுபவம் வாய்ந்த துப்பாக்கிதாரிகள் எனவும், அதில் ஒரு துப்பாக்கி விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கியாக காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையாளிகள் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மன்னார் கடற்கரையில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களைப் பற்றி நம்பகமான தகவல்கள் ஏதேனும் இருந்தால், 0718 59 16 87 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த கொலையில் கஞ்சிபானை இம்ரானுக்கு தொடர்பு இருப்பது குறித்து இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேல் மாகாண தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கசங்க மாரப்பனவின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »