இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இரு அணிகள் சம ஓட்டங்களை குவித்ததால் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டது.
அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அதிகபட்சமாக சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே கன்னி அரைச்சதம் அடித்து 67 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க அரைச்சதம் அடித்து 56 ஓட்டங்களையும், பெற்றுக் கொண்டனர்.
இதன் அடிப்படையில் 231 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்றது.
75 ஓட்டங்களுக்கே முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டாலும் பின்னர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட இறுதியில் 47.5 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றது.