எவராலும் தீர்க்க முடியாமல் போன பொருளாதார நெருக்கடியை தன்னால் தீர்க்க முடிந்திருந்தாலும், சரியான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தாமல், இந்த வேலைத்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
எனவே ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
Ask Ranil நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கடந்த 75 வருட கால ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக எதனையும் செய்யவில்லை என சில தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும் அது உண்மை இல்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய பொருளாதாரம் தொடர்பில் பேசி மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் உருவாக்கிய நிலைப்பாடே நாட்டின் விரைவான பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக அமைந்ததெனவும் தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிதாக சிந்தித்து கட்சி பேதமின்றி புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக பாரிய குழு தன்னோடு இருப்பதாலேயே ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி - இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்துள்ளீர்கள் 'யானை' இல்லாமல் 'சிலிண்டர்' தெரிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன?
பதில் - இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன். கட்சி சாராமல் செயற்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசியல் ரீதியாக புதிதாக சிந்திக்க வேண்டும்.
பல குழுக்களுடன் இணைந்து செயற்பட்டதால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன். சுயேட்சை வேட்பாளர் எந்த சின்னத்தையும் தேர்வு செய்யலாம். இத் தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானதாகும்.
கேள்வி - இந்த பொருளாதாரத்தை உங்களால் வலுப்படுத்த முடியும் என நம்புபவர்கள் உள்ளனர். ஆனால் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைத்ததால் வாக்களிக்கத் தயங்கும் சிலரும் உள்ளனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?
பதில் - எந்த ராஜபக்ஷவைப் பற்றி கேட்கிறீர்கள்? ராஜபக்ஷ என்ற மூன்று வேட்பாளர்கள் உள்ளனர். லக்ஷ்மன் ராஜபக்ஷ, விஜயதாச ராஜபக்ஷ , நாமல் ராஜபக்ச என்று மூன்று பேர் உள்ளனர். அவர்களில் ஒருவரும் என்னோடு இல்லை.
ஜூலை 2022ஐ விட இன்று நிலைமை சிறப்பாக உள்ளதா? அல்லது மோசமாக உள்ளதா? அரசாங்கத்தை வழிநடத்த எனக்கு மொட்டுக் கட்சியின் ஆதரவு கிடைத்தது. அந்த ஆதரவை புறக்கணித்திருந்தால் எண்ணெய் , உரம், எரிபொருள் இல்லாமல் தவித்திருக்கலாம்.
அந்த அரசாங்கம் நிறைவுக்கு வந்துவிட்டது. இப்போது தேர்தலுக்கு செல்கிறோம். அவர்கள் தங்கள் வழியில் செல்கிறார்கள். நான் எனது வழியில் போகிறேன். இலங்கையில் இலட்சக்கணக்கான ராஜபக்ஷக்கள் உள்ளனர். அவர்களில் சிலர் எனக்கு வாக்களிக்கலாம். எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் தனியாக களமிறங்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. நாம் வேறொரு தரப்பாக போட்டியிடுகிறோம்.
கேள்வி - ஜனாதிபதி அவர்களே, புல்மோட்டை கனியவளம், திருகோணமலை துறைமுகம், ஹம்பாந்தோட்டை விமான நிலையம் போன்ற வளங்கள் இருந்தும் நாம் முழு உலகிற்கும் கடனாளிகளாகி விட்டோம். இவற்றை 75 ஆண்டு கால ஆட்சியாளர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்?
பதில் - 75 ஆண்டுகளாக எதுவும் செய்யப்படவில்லை என்று கூற முடியாது. பல நீர்மின் நிலையங்களை கட்டியுள்ளோம். விமான நிலையங்கள் கட்டப்பட்டன. இலவசக் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. அதனால் 75 வருடங்களாக எதுவும் செய்யவில்லை என்று இவர்கள் எப்படிச் சொல்ல முடியும். உள்நாட்டுப் பொருளாதாரத்தில் மட்டுமே முன்னேற முடியும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் திறந்த பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் உள்நாட்டு பொருளாதாரத்திற்கு மாத்திரம் மட்டுப்பட வேண்டு்ம் என்ற நிலைப்பாட்டை உருவாக்கியதாலேயே விரைவான பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியாமல் போனது. அவ்வாறு எந்தவொரு நாடும் வென்றதில்லை. சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற வெற்றிகரமான நாடுகளைப் பார்த்தால் உண்மை புரியும்.
கேள்வி - ஊழல் எதிர்ப்பு மோசடிகளைத் தடுக்க நீங்கள் பல்வேறு சட்டங்களை அறிமுகப்படுத்தினீர்கள். ஆனால், இதனால் சிறிய மோசடிகயை மட்டுமே பிடிக்க முடிவதாக கூறப்படுகிறது.
பதில் - இதனால் பல மோசடிகள் பிடிபடும். 2015ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பில் ஆராய பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஜனாதிபதியின் கீழ் ஒரு பிரிவு இருந்தது. மேலும் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் கீழ் ஒரு குழுவும் இருந்தது.
பொலிஸில் மற்றொரு தனிப் பிரிவை உருவாக்கினோம். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஊழல் எதிர்ப்பு செயலகம் ஒன்று இருந்தது. இருப்பினும் பல சட்ட சிக்கல்களும் இருந்தன. எனவே புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
சட்ட விரோதமாக ஈட்டப்படும் வருமானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான பணிக்குழுக்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.
கேள்வி: பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பிரபலமடைந்து வருகிறது. அதன்படி, எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பதில்:நமது சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாம் ஆராய வேண்டும். அது சர்வதேச ஆயுதமாக மாற வாய்ப்புள்ளது.தொடர்ந்தும் உலக நாடுகள் இதைப் பற்றி ஆராய்கின்றன. மேலும் இது தொடர்பாக சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதுவே அடுத்த பத்தாண்டுகளில் ஆராயப்படும். செயற்கை நுண்ணறிவு நம்மை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். செயற்கை நுண்ணறிவால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம், அதை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதை உள்ளடக்கிய சட்டக் கட்டமைப்பை இன்னும் நம்மால் தயாரிக்க முடியவில்லை. அப்படி ஒரு நவீன நோக்கு என்றுதான் சொல்ல வேண்டும். இவை அனைத்தும் சரியான நேரத்தில் நடக்கும். இருப்பினும், செயற்கை நுண்ணறிவு தேவை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
கேள்வி: அரச சேவையை வினைத்திறனான சேவையாக மாற்ற உங்களின் திட்டங்கள் என்ன?
பதில்:10 வருட காலத்திற்குள் அதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசதுறையில் தேவைக்கும் அதிகமாக ஊழியர்கள் உள்ளனர். ஆனால், அவர்களை வீட்டுக்குப் போகச் சொன்னால் என்ன நடக்கும்? ஏனென்றால் அவர்களுக்கு வேறு வருமானன வழி இல்லை. அவர்கள் தெருக்களில் இறங்கி பங்களாதேஷைப் போல செயல்படுவார்கள். எனவே, எப்படியாவது அவர்களை வைத்து சமாளித்துச் செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் சம்பளத்தை செலவிடுவார்கள். அதனை பாதுகாத்து வைக்கவில்லை. இதன் காரணமாக அந்த பணம் நமது நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்படுகிறது. அவர்களின் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் அவர்களுடன் இதை எப்படி மேற்கொள்ளலாம் என்று சிந்திக்க வேண்டும்.
அரச சேவையை நவீன அரச சேவையாக மாற்றுவதில் எங்களது கவனம் உள்ளது. அடிமட்டத்திலும் அதிக எண்ணிக்கையானவர்கள் உள்ளனர். அவர்களுக்கு புதிய திட்டங்களை வழங்க வேண்டும். ஆனால், வெள்ளம் போன்ற அவசரச் சூழ்நிலைகளில், அரச சேவையின் செயல்திறன் உயர் மட்டத்தில் காணப்படுகிறது. அதன்படி, அரச சேவையில் வெற்றி, பலவீனம் இரண்டும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி: இறுதியாக, இந்நாட்டு மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
பதில்:யாரும் ஏற்காத நிலையில் தான் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன். பொருளாதார பிரச்சனையை தீர்க்க முடியாது என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் இன்று பொருளாதார பிரச்சினையை தீர்த்து நாட்டை ஒரு நிலையானமட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இந்தப் பயணத்தை இத்துடன் நிறைவு செய்ய முடியாது. இந்த நாட்டின் பொருளாதாரம் ஒரு புதிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும். நாம் ஏற்றுமதி பொருளாதாரமாக மாற வேண்டும். அந்த நிலைக்குச் செல்லாவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். எனவே, அடுத்த சில வருடங்கள் குறித்து சிந்தித்து முடிவெடுக்குமாறு மக்களிடம் கூறுகிறேன். அடுத்த 20 வருடங்கள் குறித்து யோசித்து முடிவெடுக்குமாறு இளைஞர்களிடம் கோருகிறேன்.