“ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கான செலவு நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும். அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும். வர்த்தமானி வெளியிட்ட தினத்திலிருந்து தேர்தல் தினம் வரையான செலவுகளை தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் ஒவ்வொரு வேட்பாளர்களும் அவர்களின் வரவு செலவு விவரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அதில் ஏதாவது தவறுகள், விதிமுறை மீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் குறித்த வேட்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான 2023ஆம் ஆண்டு 03ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, அனுமதிக்கப்பட்ட செலவுத் தொகையை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கும். அந்த நிதியை தீர்மானித்ததன் பின்னர் அந்த வரையறைகளுக்கமையவே வேட்பாளர்கள் செலவு செய்யமுடியும்.
அதேபோன்று, தேர்தல் செலவுகள் தொடர்பிலான பின் அறிக்கையிடல்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம். தேர்தல் செலவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிதி தொடர்பான வர்த்தமானி வெளியிட்டதன் பின்னர் அதிலிருந்து தேர்தல் வரையில் முன்னெடுக்கப்படும் சகல செலவுகளும் கருத்திற்கொள்ளப்படும். தேர்தல் நிறைவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர் ஒருவர் அவரின் வருமானம் மற்றும் செலவு விவரங்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்வைக்க வேண்டும்.
அதன் பின்னர் 10 நாட்களுக்கு அந்த விபரங்கள் ஆணைக்குழுவில் காட்சிப்படுத்தப்படும். யாராலும் அதனை பரிசோதனை செய்து, அதற்கான உத்தியோகபூர்வ நகலை பெற்றுக்கொண்டு தேர்தல் செலவுகள் தொடர்பில் ஏதாவது பிரச்சினை அல்லது நம்பகமற்ற தன்மை இருக்குமாயின் அதுதொடர்பில் பொலிஸ் திணைக்களத்தினூடாக முறைப்பாடு பதிவு செய்ய முடியும். நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும்.
செலவுகள் தொடர்பில் ஏதாவது தவறு அல்லது வரையறைகளை மீறிய செலவுகள் இடம்பெற்றிருந்தால் நீதிமன்றத் தீர்ப்பினூடாக பதவி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
Monday, August 19, 2024
தேர்தல் செலவு ஒழுங்குவிதி வர்த்தமானி விரைவில் - சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »