2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மக்களுக்காக இந்த நாட்டின் பொறுப்பை ஏற்று, நாட்டில் நிலவும் சிக்கலான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பாடுபட்ட நான் இன்று, நாட்டு மக்களுக்காகவே சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாரும் ஏற்றுக்கொள்ள விரும்பாத நாட்டை பொறுப்பேற்ற தான் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் வேளையில், தேர்தலைக் கோரி நீதிமன்றத்திற்குச் சென்று ரஞ்சித் மத்துமபண்டாரவும் ஹரிணி அமரசூரியவும் நான் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுள்ளனர். சிக்கலில் இருந்து மக்களை விடுவிப்பதன்றி, அதிகாரத்தைப் பெறுவதே அவர்களின் நோக்கம் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தம்புள்ளை பொது சந்தை கட்டிடத்தொகுதி வளாகத்தில் நேற்று (24) பிற்பகல் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' மாத்தளை மாவட்ட வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் மாத்தளை மாவட்டத்தில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதோடு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் இல்லாமல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தை மாத்திரம் கொண்ட குழுவினரிடம் இந்நாட்டை ஒப்படைத்தால் நாடு அழிவதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
எனவே இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டு பெற்ற வெற்றிகளைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
''நான் எதற்காக சுயாதீன வேட்பாளராக களமிறங்குகிறேன். எதற்காக அப்படி செய்கிறேன். உங்களுக்காக போராடவும், உங்களுக்கு சலுகை வழங்கவும், அடுத்த தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும், சரியான பாதையில் நாட்டை கொண்டு செல்லவுமே நான் சுயாதீனமாக களமிறங்கினேன்.
அன்று நாட்டில் வன்முறை தலையெடுத்திருந்தது. அதனை கட்டுப்படுத்த வேண்டி அவசியம் காணப்பட்டது. அதற்காக நான் முன் வந்திருக்காவிட்டால் பங்களாதேஷின் நிலைமையே இலங்கைக்கும் வந்திருக்கும். அந்த நேரத்தில் கட்சி பற்றி சிந்திக்காமல் நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்க முன்வந்தேன்.
நாட்டில் தற்போது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். இந்த பணிகள் தொடர வேண்டும். எதிர்கட்சித் தலைவருக்கும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அவர் மாற்று பிரதமருக்கு நிகரானவர். நெருக்கடி வந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் அந்த பொறுப்புக்களை மறந்து ஓடிவிட்டார்.
நெருக்கடியான காலத்தை நாடு எதிர்கொண்டது. அதிலிருந்து மீண்டு வர கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கிய தரப்பினருடன் பேசி இணக்கப்பாடுகளை எட்டினோம். சில தீர்மானங்கள் மக்களுக்கு சுமையாக அமைந்தன. அதனை பொறுத்துக்கொண்ட மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.
நாம் அதனை செய்திருக்காவிட்டால் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும். நாம் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்திருக்கிறது. சிறுநீரக நோயாளர்களுக்கு நிவாரணம் வழங்கினோம். 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கினோம். இலசவசமாக அரிசி வழங்கினோம். அடுத்த வருடத்திலிருந்து அரச ஊழியர்களின் வாழ்வாதார கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். அதனால் அடிப்படை சம்பளம் 55 ஆயிரமாக உயர்வடையும்.
முதியோரின் நிலையான வைப்புக்களுக்கு 10 சதவீத வட்டி வழங்குகிறோம். பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினோம். வங்குரோத்து அடைந்திருந்த நாட்டிலேயே இவற்றைச் செய்தோம். மூடிக்கிடந்த பாடசாலைகளை மீள ஆரம்பித்தோம். 'உறுமய' திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதி வழங்குவோம். தேர்தல் காரணமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மீள ஆரம்பிக்கப்படும்.
தேவையான பயிற்றுவிக்கப்பட்ட தொழில் படையை உருவாக்க வேண்டும். திருகோணமலை அபிவிருத்தி செய்யப்பட்டு முதலீட்டு வலயங்களை அமைப்போம். நெல் உற்பத்தி அதிகப்படுத்தப்படும். விவசாயத்தை நவீனமயப்படுத்துவோம். பொருட்களின் விலையை பெருமளவில் குறைத்திருக்கிறோம். குறிப்பாக கேஸ் விலை குறைந்துள்ளது. அதனாலேயே சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்தேன்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய 18 நாடுகள் கால அவகாசம் வழங்கியுள்ளன. இதனை முன்னோக்கி கொண்டு செல்வோம். ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் வரிகளை நீக்க போவதாக கூறுகிறார்கள். அவ்வாறு செய்தால் 2022 இன் நிலைமைக்கு நாம் மீண்டும் செல்ல வேண்டியிருக்கும்.
தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் கோரின. மக்கள் வாழ்க்கையைக் குழப்புவதே எதிர்கட்சியினருக்கு தேவையாகவுள்ளது. எனக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பை பெற்றுள்ளனர். மக்களுக்காக எதையும் செய்வேன். செப்டெம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கேஸ் இல்லை என்று கவலைப்பட நேரிடும்." என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
Sunday, August 25, 2024
மக்களுக்காகவே போட்டியிடுகிறேன் - தம்புள்ளையில் ஜனாதிபதி ரணில்...
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »