ராஜபக்ஷ குடும்பத்துக்குள் குழப்பமான நிலைமைகள்
ஏற்பட்டுள்ளதாக பொய்யான பிரசாரங்கள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பிரசாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் ராஜபக்ஷக்களின் ஒற்றுமை நிரூபணமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதை அடுத்து ராஜபக்ஷக்களின் குடும்பத்துக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடத்தில் நேரடியாக வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டமைக்கு கட்சியின் தீர்மானம் தான் காரணமாகும். கட்சி தேசத்தின் எதிர்காலத்தினை மையப்படுத்தியே தீர்மாத்தை எடுத்தது. அந்த வகையில் தேசத்தின் எதிர்காலம் சம்பந்தமாக எனக்கும் பொறுப்புள்ளது. அந்த பொறுப்பின் அடிப்படையில் தான் நான் பொறுப்பேற்றுள்ளேன்.
இத்தருணத்தில் எமது குடும்பத்துக்குள் பிரச்சினைகள் என்று பிரசாரம் செய்கின்றார்கள். அவற்றை நிராகரிக்கின்றேன். அதுமட்டுமன்றி அரசியல் ரீதியாக பலவீனம் அடைந்துள்ளவர்களின் செயற்பாடாகவே பார்க்கின்றேன்.
எதிர்வரும் நாட்களில் தேர்தல் பிரசாரப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. அதன்போது ராஜபக்ஷகளின் ஒற்றுமை மேடைகளின் ஊடாக வெளிப்படுத்தப்படும். எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரம் அப்போது அம்பலமாகும் என்றார்.