தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொதுவேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று கோடிக்கணக்கான சொத்தினை கொண்டுள்ளார். அவருக்கு அந்த சொத்து எவ்வாறு வந்தது என்பதை மக்களுக்கு சொல்லவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ மற்றும் நாமல் ராஜபக்சவும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னாபின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம். இந்நேரத்தில் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்குக் கூடிய பெறுமதி காணப்படும். அதில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய அதிகூடிய வாக்குகள் இருக்கிறது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சிந்தித்து தமது பெறுமதியான வாக்கினை அளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள்.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சியினராகிய நாம் நேற்று முன்தினம் எமது மாவட்ட, தொகுதி மற்றும் பிரதேச மட்ட மகளீர், வாலிபர் அணி உறுப்பினர்களை அழைத்து அவர்களது கருத்துக்களை உள்வாங்கியிருந்தோம்.
அந்த வகையில் நாம் அனைவரது தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்க வேண்டுமென்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அத்தோடு மாவட்டக் குழுவின் தீர்மானத்தை மத்திய குழுவுக்குச் சமர்ப்பிப்போம்.
வவுனியாக் கூட்டத்தில் கலந்து கொண்ட 33 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலை உருவாகலாம். நாம் கட்சி ரீதியாக பொது வேட்பாளருக்கு ஆதரிப்பதாக எதுவித கருத்தும் இதுவரை வெளியிடவில்லை.
அவர் தனது விருப்பத்திற்கிணங்க சில கட்சிகளின் ஆதரவுடனே முன்னெடுக்கப்பட்ட விடயமாகும்.
அத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தானே முதலில் குருக்கள்மடத்தில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டில் வெளிப்படுத்தியதாகவும் ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை.
இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்கா தனக்கெதிராக நாமல் ராஜபக்ச களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை. அவரின் நினைப்பில் ஜனாதிபதி தேர்தல் வரும்போது மொட்டுக்கட்சி தமக்கு ஆதரவளிக்குமென்ற உணர்வே காணப்பட்டது.
தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரியும். அதனால்தான் வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகத்தான் இருக்கும் என ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன்.
இந்தப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதியாக இருக்கிறார். ஏனெனில் அவருக்கான அடையாளம் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.
இது தமிழ் மக்களை அடகு வைக்கும் செயற்பாடாகும். இவ்வாறான காலகட்டத்தில் எமது இளைஞர்களின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு பதில் கூற வேண்டிய தேவையுள்ளது. இது நாம் எடுத்த தீர்மானமல்ல.
இஸ்லாமிய சகோதர்களில் சிலர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ பக்கமும் இருக்கின்றனர். எனவே மாவட்ட தமிழ் மக்கள் எமது கட்சியின் முடிவின்படி செயற்பட வேண்டுமென்றார்