Our Feeds


Saturday, August 17, 2024

Sri Lanka

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே – வேலுகுமார் எம்.பி.!


"நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை” என வேலுகுமார் எம். பி. அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இம்முறை ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காகவே போட்டியிடுகின்றார். ஒரு கட்சி சார்ந்தோ, ஒரு குழுவினர் சார்ந்தோ அல்லாமல் சுயாதீன வேட்பாளராகவே களம் இறங்கியுள்ளார். நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை. எனவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எனது சமூக பொறுப்பை நிறைவேற்றும் வகையில், எக்கட்சியும் சாராது சுயாதீனமாக ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க முன்வந்தேன்.

மலையக வரலாற்றில், 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான, ரணில் தலைமையிலான நல்லாட்சி காலம் சிறப்பு மிக்கது. பல சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை அக்காலப்பகுதியில் மேற்கொள்ள முடிந்தது. அந்த வகையில், மலையக மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கு ரணிலே நம்பிக்கைக்குரிய தலைவராக உள்ளார். அவரோடு கைகோர்த்து பயணிப்பதே நாட்டுக்கும், நம் சமூகத்திற்கும் பயன் சேர்க்கும்.

ரணில் தலைமையிலான நல்லாட்சியில், 7 பேர்ச் நில ஒதுக்கீட்டுடன் தனி வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. மலையகத்தில் புதிய கிராமங்கள் உருவானது. மலையகத்திற்கான அதிகார சபை உருவாக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாட்டுக்குள் மலையக தோட்டங்கள் உள்வாங்கப்பட்டன. மற்றும், நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் அதிகரிப்பு, பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு முன்னெடுக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக கிட்டிய பாடசாலை நல்ல பாடசாலை திட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான மலையக பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. இவற்றுக்கு அங்கீகாரம் அளித்தது ரணில் தலைமையிலான அரசாங்கம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

நாட்டை கட்டியெழுப்ப சரியான ஒரு தலைவரை அடையாளம் காட்ட வேண்டியது எமது கடமை. அதனையே நான் முன்னெடுத்திருக்கின்றேன். இது ஒரு கடினமான முயற்சி என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அந்த சவாலை வெல்வதன் மூலமாக மட்டுமே எதிர்காலமொன்றை பற்றி சிந்தித்து பார்க்க முடியும். அதைவிடுத்து, அடுத்த தேர்தலில் நாம் எங்கே இருந்தால் வெற்றிபெற முடியும், எம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற குறுகிய எண்ணப்பாட்டுடன் முடிவுகளை எடுத்தால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்த போலின் யுகத்திற்க்கே மறுபடியும் செல்ல வேண்டி ஏற்படும்.

தத்தமது எதிர்கால நலனை விட்டு, முழு நாட்டினதும், சமூகத்தினதும் நலனை முன்னிறுத்தும் அனைவரும், கட்சி, நிறங்களை விட்டு நாட்டுக்காக முன்னிற்கும் தலைவரை ஆதரிக்க முன்வர வேண்டும். எமது தாய் நாட்டின் முன்னிருக்கும் சவால்களை வெல்லும் தகைமையுடைய ஒரே தலைவர், ரணிலை ஆதரிப்பது மட்டுமே காலத்தின் கட்டாயமாக உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »