1700 ரூபா நாளாந்த சம்பள விவகாரத்தில், அப்போதைய தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மலையக மக்களுக்கு துரோகம் விளைவித்ததனாலேயே, அவர் இன்று பாராளுமன்ற உறுப்புரிமையைக் கூட இழந்தார் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று (10) நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தொழில் அமைச்சராக செயற்பட்ட மனுஷ நாணயக்காரவும் கொட்டகலைக்கு வருகைதந்து 1,700 ரூபா வழங்கப்படும் என உறுதியளித்தனர். மக்களை ஏமாற்றி பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து நாடகங்களையும் அரங்கேற்றினர்.
ஆனால் இது ஏமாற்று நடவடிக்கை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. சம்பள உயர்வு தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் கூட மீளப்பெறப்பட்டுள்ளது. இவ்வாறு மலையக மக்களுக்கு துரோகம் செய்ததால் தான் இன்று பாராளுமன்ற உறுப்புரிமையைக் கூட மனுஷ நாணயக்கார இழந்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு அனுப்படுவார், அதன்பின் பொதுத்தேர்தலில் மலையக அமைச்சரின் கட்சியும் காணாமல்போகும். தமக்கு துரோகம் இழைந்த இந்த மூன்று தரப்புகளுக்கும் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.” – என்றார்.
