Our Feeds


Wednesday, August 14, 2024

Zameera

லயன் அறைகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு


 பெருந்தோட்டப் பகுதிகளில் லயன் அறைகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே வீட்டில் வாழும் உப குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவுகளை வழங்கும் தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களைக் அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (13) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நலன்புரி நன்மைகள் சபை தற்போது அஸ்வெசும நலன்புரி நன்மைத் திட்டத்தை அமுல்படுத்தி வருகிறது. 2002 ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட 2022 ஆண்டின் 1  இலக்க நலன்புரி நன்மை கொடுப்பனவு (கொடுப்பனவை பெறுவதற்கு தகைமையான நபர்களைத் தெரிவு செய்தல்) ஒழங்குவிதிகளுக்கு அமைய திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அந்த ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்யும் நபர்கள் அல்லது குடும்பங்கள்அஸ்வெசும நன்மைகளை பெறுவதற்கான உரித்தைப் பெறுவார்கள். பெருந்தோட்டத் துறையில் உள்ள தோட்டங்களில் தனி வீடுகள் இல்லாதிருப்பதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் தனிக் குடும்பங்கள் கூட்டாக ஒரே லயின் வீடுகளில் வசிக்கின்றனர்.

தற்போதைய நடைமுறைக்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் வேறுவேறான குடும்ப எண்ணிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல், லயின் அறைகளில் வாழ்கின்ற அனைத்து நபர்களும் ஒரு குடும்ப அலகாக கருதப்படுகின்றனர். குறித்த நலை மேற்குறித்த குடும்பங்களுக்கு பாதகமானது என்பது தெரியவருகிறது.

எனவே, 2022ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை (கொடுப்பனவுகளுக்குப் பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்தல்) கட்டளைகளின் பிரகாரம், அஸ்வெசும முன்மொழிவுத் திட்டத்துக்கு தகைமைகளை நிர்ணயிக்கும் போது லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு செயலாற்றுமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »