நாடு எதிர்நோக்கும் எந்தவொரு சவாலையும் முறியடிக்கக் கூடிய திறமையான அணி தன்னிடம் இருப்பதாகவும், அரசாங்க நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நாட்டில் விரைவான பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதே தமது இலக்காகும் எனவும், அந்த இலக்கை இதுவரை எட்டியுள்ளதாகவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை பேணுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படுவது மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அதுவே ஒரே வழியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் இலங்கைக்கு கணிசமான நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (26) நடைபெற்ற இலங்கை தொழில் நிபுணர்களின் அமைப்பான OPA வின் 37 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டுக்கான வருடாந்த மாநாடு "இலங்கையின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை நோக்கி" என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தொழில் நிபுணத்துவ சங்கங்களின் அமைப்பான OPA, 60,000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 34 துறைகளுக்குள் சேவை செய்யும் 52 உறுப்பினர் சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பாகும்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இலங்கை தொழில் நிபுணத்துவ அமைப்பின் வருடாந்த சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையின் நிபுணத்துவ சங்கங்களின் அமைப்பு (OPA) 60,000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 34 துறைகளுக்கு சேவை செய்யும் 52 உறுப்பினர் சங்கங்களை உள்ளடக்கிய தொழில் வல்லுநர்களின் அமைப்பாகும்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
"மத்திய வங்கி ஆளுநர் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலில் உக்கிரத்தன்மையை தௌிவுபடுத்தினார். அதிர்ஷ்டவசமாக, இரண்டு முக்கிய காரணங்களால் விரைவான பொருளாதார மீட்சியை அடைந்தோம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக பாடுபட்ட கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலமான குழுவொன்று என்னிடம் இருந்தது. இரண்டாவதாக, தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து, முக்கியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளோம்.
கிரீஸில் ஏற்பட்ட நிலைமை இலங்கையில் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் உறுதியாக இருந்தோம். கிரீஸ் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்டிய பிறகு, ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதால் கிரீஸின் பொருளாதாரம் மேலும் சரிந்தது. எனவே கிரீஸ் மீண்டு வர சுமார் பத்தாண்டுகள் ஆனது. கூடிய விரைவில் குணமடைவதே எனது இலக்காக இருந்தது. நாம் இப்போது அதை செய்துள்ளோம்.
நிலையான பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடனான நமது ஒப்பந்தத்திற்கு இணங்குவது மிகவும் முக்கியமானது. அந்த உடன்பாட்டை எட்டுவது எளிதல்ல. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பல்வேறு கடன் வழங்கும் குழுக்கள் உட்பட பல தரப்பினருடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
அவற்றில் பெரிஸ் கழக நாடுகளும் இருந்தன. சீனா வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருந்தது. எனவே இந்த சிக்கலான சூழ்நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. மேலும் எமில்டன் ரிசர்வ் வங்கியால் எங்களுக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இன்னும் தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
சவால்கள் இருந்தபோதிலும், நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள் நெருக்கடியிலிருந்து எங்களை வெளியே கொண்டு வந்து, மக்களுக்கு வளர்ச்சி மற்றும் நிவாரணம் தொடர்பிலான நம்பிக்கையை அளித்துள்ளது. உதாரணமாக, எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன. ஏனைய துறைகளிலும் சாதகமான பிரதிபலன்கள் காணப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் அல்லது அதிலிருந்து விலக வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துள்ள ஒப்பந்தமே நெருக்கடியிலிருந்து மீள ஒரே வழி. இது எங்களுக்கு கணிசமான நிவாராணத்தை அளித்துள்ளது.
நாம் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக மாற வேண்டியது அவசியம். அதற்காவே பொருளாதார மாற்றச் சட்டம் , பொது நிதிச் சட்டம், மத்திய வங்கிச் சட்டம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டம், அரச கடன் முகாமைத்துவச் சட்டம் போன்ற பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, முதன்முறையாக ஒரு கொள்கையை சட்டமாக ஆக்கியுள்ளோம். அவ்வாறிருக்க, தலைமை மாற்றம் அல்லது ஆட்சி மாற்றத்தினால் அதனை இலகுவாக மாற்ற முடியாது.
நாம் இப்போது போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி பொருளாதாரமாக மாறுவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு, ஆடை கைத்தொழில் போன்ற துறைகளில் அதிக உற்பத்தித் திறன் தேவைப்படுகிறது. அவற்றை கொண்டு உயர்தரச் சந்தைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும்.
மேலும், உலக அளவில் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பயன்படுத்தி விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும். தற்போது பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படாத சுமார் 300,000 ஏக்கர் நிலப்பரப்பை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படலாம். நெல் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். விவசாயம் மற்றும் பால் பண்ணை மற்றும் புதிய பயிர் உற்பத்திக்காக பெருமளவான காணிகளை விடுவிக்க தீர்மானித்துள்ளோம்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம், அதன் மூலம் ஒரு இரவுக்கான வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, சுற்றுலா மற்றொரு முக்கிய துறையாக மாறுகிறது. விநியோகச் சங்கிலிகளை விரிவுபடுத்துதல், உயர்-தொழில்நுட்ப தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஆரம்ப பிரவேசம் ஆகியவையும் முக்கியமானவை. அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ இருக்கிறோம்.
எதையாவது தொடங்குவதில் தான் சவால் இருக்கிறது. அதற்கான திறமை எங்களிடம் உள்ளது. சரியான சூழல் இருந்தால் எமக்கு வெற்றி பெறலாம். நாங்கள் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே நீங்கள் சரியான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்" எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை தொழிற்சங்கங்களின் அமைப்பின் தலைவர் சரத் கமகே, ஓபிஏ 37வது உச்சி மாநாட்டுக் குழுவின் தலைவரும், அமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தலைவருமான சுஜீவ லால் தஹநாயக்க, சங்கத்தின் பொதுச் செயலாளர் திசர டி சில்வா மற்றும் அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tuesday, August 27, 2024
IMF உடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தமே நெருக்கடியிலிருந்து மீள ஒரே வழி - ஜனாதிபதி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »