Our Feeds


Friday, September 27, 2024

Zameera

ஜப்பானின் உதவியுடன் 11 திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படும்


 ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஜனாதிபதி செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, கண்டி நகர நீர் முகாமைத்துவ திட்டம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி இரண்டாம் கட்ட திட்டம்;, தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், தேசிய ஒலிபரப்பு மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி திட்டம், அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் இரண்டாம் கட்ட திட்டம், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், களு கங்கை நீர் வழங்கல் திட்டம், சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் ஜப்பானிய திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


அத்துடன், ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் தற்போது ஹபரணை - வெயங்கொட மின் விநியோக பாதை திட்டத்தின் முதல் கட்டம், அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் ஆகியவை இறுதிக்கட்ட வேலைகளிலுள்ளதாகவும் களனி கங்கை புதிய பாலம் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் எனவும், இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்படத் தயார் எனவும் ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பிரதித் தலைவர் நயோக்கி கமோஷிதா, முதன்மைச் செயலாளர் ஒஹாஷி கென்ஜி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »