இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களைப் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுவிக்க வேண்டும் என இந்தியாவின் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த 37 மீனவர்களையும் விடுதலை செய்வதன் மூலம் இந்திய இலங்கை உறவின் சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 80 மீனவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுடன் தனது கடல் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளது. ஆனால் எந்த நாடும் இலங்கையைப் போலத் தனது அயல்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதலை மேற்கொள்வதில்லை, கைதுசெய்வதில்லை, அபராதம் விதிப்பதில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நீங்கள் ஆட்சிப்பொறுப்பில் இருக்கின்றீர்கள் புதிய ஆரம்பம் குறித்து வாக்குறுதியளித்துள்ளீர்கள். உங்கள் அதிகாரத்தினை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.