மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஐந்து இளைஞர்களும் நேற்று (25) மது அருந்திவிட்டு மகாவலி ஆற்றில் இறங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலிருந்து விக்டோரியாவுக்கு நீர் திறக்கும் வாயில் ஒன்று நேற்று (25) காலை முதல் திறக்கப் பட்டுள்ளதுடன், அதில் சிக்கிய 5 இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், மூவர் கற் பாறைகளில் தொங்கி உயிர் பிழைத்துள்ளனர்.
இந்த இளைஞர்கள் அனைவரும் கண்டி-யக்கஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போன இருவரில் ஒருவர் தனஞ்சய இந்துவர வயது (22) என பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய இளைஞன் யார் எனத் தெரியவில்லை என உயிர் தப்பிய மூன்று இளைஞர்களும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவரின் தாயார் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியுள்ளதாகவும் அவர் வழங்கிய வெளிநாட்டு மதுபான போத்தலை குடித்துவிட்டு இந்த இளைஞர்கள் நீருக்குள் இறங்கியதும் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ஏ.அமீனுல்லா)