நாட்டில் அடுத்து இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.“கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் அடுத்து இடம்பெறவுள்ள தேர்தல்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். மக்களின் நிலைப்பாடே தேர்தல் முடிவாக வெளியாகியுள்ளது. மக்களின் ஆணையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இருந்தபோதும் எங்களுக்கான வாக்குகளை அதிகரித்துக்கொள்ளும் முறை தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம்.”
என்று கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான பேச்சுவார்த்தை மஹிந்த ராஜபக்ஷ தலை மையில் கட்சி முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் நேற்று (24) நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேலும், ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதா என்பது தொடர்பிலும் தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் நாங்கள் இன்னும் கலந்தாலோசிக்கவில்லை. அதுதொடர்பில் ஒன்றிணைந்து தீர்மானம் எடுக்கப்படவேண்டும். அநுரகுமார திசாநாயக்கவினால் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனியாக போட்டியிடவே தீர்மானித்துள்ளோம். பொதுஜன பெரமுன என்பது தனியான கூட்டணி. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியுடன் இணைவதற்கான எதிர்பார்ப்பு இல்லை. அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே எங்களின் தரப்பினரும் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறோம். பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கலந்தாலோசித்து வருகிறோம். அடுத்துவரும் நாட்களில் பரந்துபட்ட புதிய கூட்டணியாக செயற்படுவோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள எவரையும் கட்சியுடன் இணைத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதுடன் கட்சியிலிருந்து விலகிச் சென்ற பலர் மீண்டும் கட்சியில் இணைவதற்கு கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.