ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்லப்போகிறார் என்பதுபோலவே படுதோல்வியடையப்போகிறவர் எவர் என்பது பற்றியும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் நாட்டு மக்கள்.
இன்றைய நிலையில், தேர்தல் நடந்தால் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரவுக்கே அதிகமான வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரசாங்கம் நடத்திய இரகசியப் புலனாய்வில் அநுரவுக்கு அதிகளவு மக்கள் செல்வாக்கு இருப்பது தெரியவந்திருக்கிறது.
வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களை எடுத்துக்கொண்டால் சுகாதாரத் துறை, ஆசிரியர் சேவைகளில் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதால் அது தென்னிலங்கை பிரதான கட்சிகளின் வாக்குவீத எதிர்பார்ப்பைத் தகர்த்திருக்கிறது. அநுரகுமாரவுக்கு இருக்கும் ஆதரவானது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்குத் திரண்டிருந்த ஆதரவை ஒத்ததாகவே உள்ளது. தேர்தலில் வாக்களிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து ஆதரவாளர்கள் திரண்டுவர ஆரம்பித்திருப்பதும் தேசப்பற்று என்ற போர்வையில் வியத்மக என்ற பெயரில் சிங்கள தேசியவாதிகள் சூழ்ந்திருப்பதும் பெரும் சிங்கள வர்த்தகப் புள்ளிகள் ஆதரவை வழங்கிக்கொண்டிருப்பதுவும் அநுரகுமாரவுக்கு இம்முறை சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இவற்றைத் தவிர, தமிழ், முஸ்லிம் இளைய வாக்காளர் சமூகத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கிடைக்க ஆரம்பித்திருப்பதும் அக்கட்சிக்கு ஒரு பூஸ்ட்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆரம்பத்தில் நல்ல ஆதரவு அலை இருந்தாலும் காலப்போக்கில் அது குறைந்துகொண்டே வருகிறது. அக்கட்சிக்குள் முறையான தொடர்பாடலின்மை, ஆட்சி கிடைக்கும் என்ற யோசனையில் இப்போதே நடக்கும் குத்துவெட்டுகள் அதற்குப் பிரதான காரணமாகும். சம்பிக்க ரணவக்க பெளத்த வாக்குகளைக்கொண்டவர் என்றாலும் அவருக்கு மேடைப்பேச்சு வரையறுக்கப்பட்டுள்ளது. நிதி பற்றிய விவகாரத்தை ஹர்ஷ டி சில்வா மட்டுமே பேசவேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாலக்க கொடஹேவா, ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்களின் ஆலோசனை, சஜித்தின் பாரியார் ஜலனியின் அரசியல் தலையீடுகள் என்பனவற்றால் அக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, சஜித் ஜனாதிபதியானால் பிரதமராக யார் வருவது என்ற போட்டியும் அங்கு ஏற்பட்டுள்ளது. அந்தப் பதவியில் கண்வைத்துள்ளார் சம்பிக்க. ஆனால், அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அந்தப் பதவிக்கு வரும் தனது விருப்பை ஏலவே சஜித்திடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, ஜீ.எல்.பீரிஸும் பிரதமர் பதவியில் விருப்புக்கொண்டுள்ளார் என்பது லேட்டஸ்ட் செய்தி.
சஜித்தின் கட்சிக்கு கடந்தவாரம் ஏற்பட்ட பின்னடைவுக்கு மற்றுமொரு காரணம், அக்கட்சியின் அரசியல் நகர்வுகள். அநுரகுமாரவைப் பொறுத்தவரை அவர் தன்னால் செய்யக்கூடியவற்றை மட்டுமே சொல்கிறார். ஆனால், சஜித் சிங்கள மக்களின் நாடித்துடிப்பை இன்னும் அறிந்து பேசுபவராக இல்லை. தமிழரசுக் கட்சி, மலையக தமிழகக் கட்சிகள், முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்று பலதரப்பை சஜித் தன்வசம் வைத்துள்ளார். தமிழ், முஸ்லிம் கட்சிகளை அரவணைத்து மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைக் கொடுத்து சஜித் செயற்பட்டால் நாட்டின் இறைமை பாதிக்கப்படும் என்ற கருத்து தென்னிலங்கையில் ஆழமாகப் பதிந்துவருகிறது. அதேபோல் படைகளில் குறைப்புகளை செய்யவேண்டுமென தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் குறிப்பிட்டிருப்பது தமிழ்த்தரப்புகளின் அழுத்தத்தால்தானா என்ற கேள்வியும் சிங்களவர்களின் மனங்களில் எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல, தமிழர்களின் கோரிக்கைக்கு சஜித் இணங்கும்போது அது சஜித் கூட்டணியிலுள்ள முஸ்லிம் தலைவர்களை சங்கடத்திற்குள்ளாகும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் ஆதரவை சஜித் பெற்றாலும் அக்கட்சியிலுள்ள பலரின் எதிர்ப்பும் தமிழ் வாக்குகளை வடக்கிலிருந்து சஜித்துக்கு கிடைக்கும் வீதத்தைக் குறைத்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் அரியநேத்திரனுக்கு தமிழர்கள் அளிக்கும் வாக்குகள்கூட சஜித்துக்குக் கிடைக்கவேண்டியவைதான். அதனால்தான் அரியநேத்திரனுக்கு வாக்களிப்போர் இரண்டாவது வாக்கை சஜித்துக்கு செலுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ் கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோன்றதொரு கோரிக்கையை மாத்தளை எம்.பி. ரோகினி கவிரத்னவும் விடுத்திருந்தார். ஆனால், இந்தக் கோரிக்கைகளை மக்கள் ஏற்பார்களா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.
ஜனாதிபதி ரணிலைப் பொறுத்தவரை அவருக்கான மக்கள் ஆதரவில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், சிங்கள வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பிரித்தால் அது சஜித்துக்கே தாக்கத்தை ஏற்படுத்துமெனக் கருதுகிறார் ரணில். அதனால்தான் அநுரவையும் சஜித்தையும் மூட்டிவிடும்வகையில் பேச ஆரம்பித்து சஜித்தால் அநுரவை வெல்ல முடியாது என்று பகிரங்கமாகவே உரையாற்றிவருகிறார். ரணிலை எடுத்துக்கொண்டால் அவர் மிகவும் கூலாக இருக்கிறார். வாழ்க்கையில் ஒருதடவையேனும் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்துவிடவேண்டும் என்ற அவரது கனவு நனவாகி இருக்கிறது. இனி தேர்தலில் தோற்றாலும் அவருக்குக் கவலையில்லை. ஆனாலும் தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. அநுரகுமார ஜனாதிபதியானாலும் பரவாயில்லை, சஜித் ஜனாதிபதியாகிவிடக்க்கூடாதெனக் கருதுகிறார் ரணில். அவரின் எல்லா வேலைகளும் அப்படித்தான் இருக்கின்றன. சஜித் தனது ஜூனியர் என்பதால் அவரிடம் தோற்றுவிட்டதாக வரலாறு பதிவு செய்துவிடக்கூடாதென கருதும் ரணில், தேசிய மக்கள் சக்தியின்பால் தனது ஆதரவை மறைமுகமாக வழங்கிக்கொண்டிருக்கிறார்.
அரசியலில் பொதுவாக கருதப்போனால் கோட்டாபய ராஜபக்ஷவின் 69 இலட்சம் வாக்குகளில் கணிசமான பகுதி இப்போது ஜே.வி.பியிடம் உள்ளது. ஊர்ப்புறங்களில் கோட்டாவுக்கு வேலை செய்த ஆட்கள், அமைப்புகள் எல்லாம் இம்முறை அநுரகுமாரவுக்கு ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ராஜபக்ஷ முகாம் உறுப்பினர்களைத் தனது அருகில் வைத்திருப்பது ரணிலுக்கு தாக்கம் என்றாலும் அவர்களால் ஊர் வாக்குகளை அள்ளமுடியுமென ரணில் கருதுகிறார்.
உதாரணமாக பொதுஜன பெரமுனவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் என்னதான் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அவர்களுக்கென வாக்குவங்கி இருக்கிறது. அவர்களால் நன்மையடைந்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் தனக்குக் கிடைக்குமெனக் கருதுகிறார் ரணில்.
பதுளையில் ரணில், மாத்தளையில் ஜனக பண்டார, அம்பாந்தோட்டையில் அமரவீர, அநுராதபுரத்தில் எஸ்.எம்.சந்திரசேன, கொழும்பில் சுசில், மாத்தறையில் காஞ்சன, கம்பஹாவில் பிரசன்ன, களுத்துறையில் ரோஹித்த, நாவலப்பிட்டியில் மஹிந்தானந்த, நுவரெலியாவில் ஜீவன் தொண்டமான், யாழ்ப்பாணத்தில் டக்ளஸ், கண்டியில் திலும், மட்டக்களப்பில் பிள்ளையான், கேகாலையில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கனக ஹேரத், இரத்தினபுரியில் ஜோன் செனவிரத்ன, பவித்ரா, பொலனறுவையில் செஹான் சேமசிங்க ஆகியோர் ரணிலுக்கு வலதுகரமாக இருக்கின்றனர் என்பதால் ரணில் அப்படி எண்ணுவதிலும் நியாயம் உள்ளது.
எனவேதான் அநுரகுமார உடைக்கும் சிங்கள வாக்குகள் தனக்கு ஆபத்தைத் தராது என்று கருதுகிறார் ரணில். அதுமட்டுமல்ல, தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதாலும் இதர தமிழ்க் கட்சிகள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாலும் ஏற்படும் தாக்கம் சஜித்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துமெனக் கருதுகிறார் ரணில். ஆனாலும் தேர்தல் கள நிலைவரம் அபப்டியானதாக இல்லை. ரணில், சஜித்தை மீறிய மக்கள் ஆதரவு அநுரவுக்கு இருக்கிறதென்பது உண்மை. இந்த நிலையை தேர்தல் அமைப்புகளும் வெளிநாட்டுத் தூதரகங்களும் தங்களது மதிப்பீட்டில் உறுதிசெய்துள்ளன,
இந்த நிலைமை தேர்தலுக்கு இரண்டு வாரங்களே இருக்கும்போது கணிக்கப்படுவதென்றாலும் அடுத்த வாரங்களில் நிலைமை மாறலாம். அப்படியே நிலைமை மாறுவதாயின், அசத்திய சம்பவங்கள் ஏதாவது நடக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர் ஒருவரை இலக்குவைத்து தாக்குதல் நடத்த முயற்சி என்ற சி.ஐ.டியினருக்குக் கிடைத்துள்ள தகவலை உடனடியாக விசாரிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே உத்தரவு என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சம்பவங்கள் ஏதேனும் இடம்பெற்று நாட்டில் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் ஏற்பட்டால், தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும். அபப்டியாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் வரை ஜனாதிபதி பதவியில் ரணில் இருக்கும் நிலையே ஏற்படும்.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தேர்தல் நடந்து வெற்றிவாய்ப்பு அநுரவின் பக்கம் செல்லுமாக இருந்தால், உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்படும் வாய்ப்பே இருக்கிறது. அப்படி கலைக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தலுக்கு ரணிலும் சஜித்தும் சேர்ந்தே செல்லவேண்டிய கட்டாய நிலை ஏற்படலாம். ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வென்றால் பாராளுமன்றமும் அவரின் கட்டுப்பாட்டில் சென்றுவிடக்கூடாதெனக் கருதும் பிரதான நாடொன்று ரணிலும் சஜித்தும் அதற்கு உடன்படவேண்டுமென இப்போதே வலியுறுத்த ஆரம்பித்துள்ளதாக அறியமுடிந்தது.
தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிவரும் நிலையில், கட்சித்தாவல்கள் பரவலாக இடம்பெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சஜித்தையும் ரணிலையும் இணைக்கும் முயற்சிகள் இன்னமும் இடம்பெற்று வருகின்றன.
கடந்தவாரம் இது தொடர்பில் ஹரீன் பெர்னாண்டோவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் நீண்ட பேச்சுகளை நடத்தியுள்ளனர். தேர்தல் நெருங்கும்போது எதிர்பாராத அதிசயங்கள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.