ரயில் ஆசனங்களை ஒன்லைனில் முன்பதிவு செய்வதால் சாமானியர்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் ஏராளமானோர் ஒன்லைனில் ஆசனங்களை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் ஏராளமானோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆசன முன்பதிவு துவங்கிய இரண்டு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடுவதாகவும், இதனால் மக்களுக்கு ஆசனங்களை முன்பதிவு செய்ய வாய்ப்பில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கொழும்பிலிருந்து பதுளை வரையிலான புகையிரதத்தில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாகவும் மலையகப் பாதையில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
2,500 ரூபாய் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை 5,000 முதல் 10,000 ரூபாய் வரை ஒரு கும்பல் விற்பனை செய்வதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ரயில்வே துணைப் பொது மேலாளர் என்.ஜே. இடிபோலகேவிடம் கேட்டபோது, ரயில்வே துறைக்கும் மக்களிடம் இருந்து இது குறித்து புகார்கள் வருவதாகவும், ஆசன ஒதுக்கீடு தொடர்பாக ரயில்வே துறை மட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
போக்குவரத்து அமைச்சு மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படமால் ரயில்வே அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது எனவும், திணைக்கள மட்டத்தில் அமைச்சுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இடிபோலகே தெரிவித்தார்.