Our Feeds


Thursday, September 12, 2024

Sri Lanka

பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்து வழங்கப்படும் - பௌத்த பிக்குகள் முன்னிலையில் சஜித் உறுதி



புத்தசாசனத்தை பாதுகாத்து சுபிட்சமான நாட்டிற்குள் அறநெறிப் பண்புள்ள சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அறநெறி பாடசாலைகளின் போட்டிகளுக்கேனும் அனுசரணையை வழங்க முடியாத அரசாங்கம் ஒன்று காணப்படுகின்றது. 


இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பதோடு அறநெறி கல்வியை பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


விகாரைகளில் மகா சங்கத்தினர் முன்னெடுக்கின்ற மத சாசன செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மதங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலும் காணப்படுகின்ற ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மிகப்பெரிய பலமாக கொண்டு, வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் தேசிய மாநாடு மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினர் தலைமையிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடனும் நேற்று (11) கொழும்பில் வெற்றிகரமாக இடம்பெற்றது.


மூன்று பீடங்களையும் சேர்ந்த பெருந்திரளான மகா சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.


கிராமங்களிலும் நகரங்களிலும் அமையப் பெற்றுள்ள விகாரைகளிலே இருக்கின்ற மகா சங்கத்தினர் எமது நாட்டின் சமாதானம், சுபீட்சம், அபிவிருத்தி போன்றவற்றிற்காகவும், சிறந்த தார்மீக சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையை முன்னெடுக்கின்றனர். 


மகா சங்கத்தினருதும் ஏனைய மதத் தலைவர்களினும் ஆலோசனைகளினதும் அறிவுரைகளினதும் ஊடாக அரசாட்சி ஒன்று இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இன்று எமது நாடு பலவிதமான சவால்களை எதிர்கொள்கின்றது. கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயலிழந்து மக்களுடைய வாழ்க்கை தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 


நாட்டிற்கான சவால்கள் வருகின்ற போது வரலாறு நெடுகிலும் மகா சங்கத்தினரே ஆலோசனை வழங்கி இருக்கின்றனர்.


இந்த சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினரின் தேவை மிகவும் முக்கியமாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மேலும் எமது நாட்டில் மனிதப் பண்புகள் குறைவடைந்து வருகின்றன. மத தலைமைத்துவங்களின் ஊடாக சிறந்த சமூகத்துக்குள் பிரவேசித்து வீழ்ச்சி அடைந்த நாட்டை அறநெறித் தன்மையுடன் சிறந்த பண்புகளின் பக்கம் விட்டுச் செல்ல வேண்டும். 


அறநெறி கல்வியை மையப்படுத்திய சிறந்த சமூகக் கட்டமைப்புக்கான அடித்தளம் இடப்பட வேண்டும். 


அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சகல வசதிகளையும் கொண்ட கல்வியை வழங்குகின்ற நிலையமாக மத ஸ்தலங்கள் மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அத்தோடு விகாரை கட்டமைப்புக்குள் நாட்டிற்கான சிறந்த விடயங்கள் இடம் பெறுவது மழுங்கடிக்கப்பட்டு, மத ஸ்தானங்கள் மூடப்படுகின்றமையினால் அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »