Our Feeds


Monday, September 9, 2024

Zameera

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம் முன்வைக்கவில்லை - விஜயதாச ராஜபக்ஷ


 இலங்கையை சீரழிப்பதற்கு நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டு மக்களினதும் அரச நிர்வாகத்துக்கும் பயனுடையதாக அமையும் வகையில் தான் நாணய நிதியம் பல நிபந்தனைகளை விதித்தது.

இயற்றப்பட்டுள்ள சிறந்த சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த  உறுதியான, தகைமையான தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களுக்கு உண்டு என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (8) இடம் பெற்ற 'ஜனாதிபதித் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி,பதில் வருமாறு,

கேள்வி-  நாணய நிதியத்தின் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை குறிப்பிடுங்கள் ?

பதில் -2022 ஆம் ஆண்டு வங்குரோத்து நிலையடைந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வங்குரோத்து நிலையடைந்ததன் பின்னர் இலங்கைக்கு முதலாவதாக எமது நட்பு நாடான இந்தியாவே 4 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியது. இதனைத் தொடர்ந்து  சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டோம்.

2022 ஆம் ஆண்டு நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை கோரிய போது ' இலங்கை எங்களை 16 தடவைகள் ஏமாற்றிய நாடு, ஆகவே இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியாது. ஊழல், மோசடி, ஆட்சி செய்யும் நாடு' என்று நாணய நிதியம் குறிப்பிட்டது.

இவ்வாறான நிலைக்கு மீண்டும் இலங்கை செல்லாது என்று நாணய நிதியத்துக்கு வாக்குறுதியளித்தோம்.வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற பல நிபந்தனைகளை நாணய நிதியம் முன்வைத்தது.

இலங்கையை சீரழிப்பதற்கு நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டு மக்களினதும் அரச நிர்வாகத்துக்கும் பயனுடையதாக அமையும் வகையில் தான் நாணய நிதியம் பல நிபந்தனைகளை விதித்தது.இதனால் தான் பல சட்டங்களை இயற்றினோம்.

அரச நிறுவனங்களை விற்பனை செய்யுமாறு நாணய நிதியம் ஒருபோதும் குறிப்பிடவில்லை.அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கங்களுக்காகவே அரச நிறுவனங்கள் விற்கப்படுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமுடையதாக்குமாறு மாத்திரமே குறிப்பிடப்பட்டது.இலாபமடையும் அரச நிறுவனங்களை  விற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதனை ஏற்க முடியாது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »