‘‘கடந்த அரசாங்கத்தில் நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப் பதற்கு தன்னால் மேற்கொள் ளப்பட்ட சட்டபூர்வமான அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்’’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாகியிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து அந்த சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் அந்த சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிக்கு என்னவானது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்’’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சேவை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (23) இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அந்தச் சந்திப்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எங்களின் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கான சட்டப்பூர்வத்தன்மை தொடர்பில் தெளிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன். அரசியலமைப்பின் 43ஆவது உறுப்புரையின் பிரகாரமே அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சகல அரச உத்தியோகத்தர்களதும் கோரிக்கையை பரிசீலனை செய்ததன் பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்தோம். சம்பள அதிகரிப்புக்கான அந்த கோரிக்கை நியாயமானதாகும்.
2022ஆம் ஆண்டாகும்போது மக்களுக்கான வேதனங்களின் பெறுமதி 50சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. நெருக்கடியின் மத்தியிலேயே வாழ்வாதாரத்தை முன்னெடுத்தார்கள். கஷ்டங்களுடனேயே இருந்தார்கள். கடன் பெற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள். ஒருசிலர் அவர்களின் சொத்துகளை விற்றார்கள். நான் ஆட்சியை கைப்பற்றிய ஆரம்ப காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. அதனை மக்களுக்கும் அறிவித்திருந்தேன்.
அநேகமானவர்கள் 25,000 ரூபாவால் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்கள். 2024 ஆம் ஆண்டு 10,000 ரூபாவால் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்திருந்தோம். இருந்தபோதும் அந்த சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை.
நிதியின் பெறுமதி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும்போது மக்கள் நெருக்கடியை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் காலை உணவு இன்றி பாடசாலைகளுக்குச் சென்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அநேகமான மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதை நிறுத்திவிட்டார்கள். ஆனால் அந்த நிலைமை மாறியுள்ளது. சமூக கட்டமைப்பு இவ்வாறு வீழ்ச்சியடைவதை நான் விரும்பவில்லை.
அதற்கமைய, அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தேடிப்பார்க்க உதய செனவிரத்ன குழுவை நியமித்தேன். தீர்மானம் எடுக்க அவர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இருந்தபோதும் அதற்கு முன்னரே குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதுதொடர்பில் உதய செனவிரத்னவிடம் வினவியபோது, இது பாரிய பிரச்சினை என்பதால் கட்டாயம் நிவாரணம் வழங்கியே ஆகவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் அவ்வளவு நிதியை பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் எங்களின் வரவு செலவுத் திட்டத்தில் அவ்வளவு நிதியை ஏற்க முடியாது என்றும் திறைசேரியின் செயலாளர் கூறியிருந்தார். அதன் பின்னர் ஜனாதிபதி செயலாளருடன் கலந்துரையாடி எவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் என்று தேடிப்பார்க்குமாறும் நான் ஆலோசனை வழங்கியிருந்தோம்.
அதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இல்லாததால் 50 சதவீத சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு மிகுதியை அடுத்த வருடத்தில் அதிகரிக்க முடியும் என்றும் எனக்கு அறிவித்தார்கள்.
அதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களை தொடர்ந்து சம்பள அதிகரிப்புக்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தேன். ஜனாதிபதி என்ற அடிப்படையிலேயே அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு கையொப்பமிட்டேன்.
அந்த தீர்மானத்துக்கமைய திறைசேரியின் நிலைப்பாடுகள் அவசியமற்றதாகும். அமைச்சரவையில் எவ்வாறான தீர்மானங்களும் எடுக்க முடியும். தீர்மானங்கள் தொடர்பான சாராம்சம் அமைச்சரவைத் தலைவருக்கு வழங்கப்படுவதுடன் அது அமைச்சரவை அறிக்கைகளில் பதிவிடப்படும். அதாவது, அமைச்சரவைத் தீர்மானங்களுக்கு வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை என்பதுடன் தலைவரினால் தீர்மானம் அறிவிக்கப்படும். அதற்கமைய எங்களின் தீர்மானமும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பானது முழுமையாக சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய, குறித்த சம்பள அதிகரிப்பு செலுத்தப்பட வேண்டும். அதனை எங்களால் பெற்றுக்கொடுக்க முடியும். பரிசீலனைகளின் பின்னரே அதற்கு அனுமதி வழங்கினோம். இந்த சம்பள அதிகரிப்பை காலங்கடத்தக்கூடாது.
அடுத்த வருடம், அரச வருமானம் 12 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக அறிவிக்க வேண்டும். அதற்கமையவே இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொண்டுள்ளேன். இந்த சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதற்கான நிதி இருப்பும் இருக்கிறது. நிதி இல்லை என்று கூறுகிறார்கள் என்றால் அது புதுமையான கதையாகும். அவ்வாறு சம்பள அதிகரிப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு என்னவானது என்று அரசாங்கத்தை வினவ வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை
என்றால் நாங்கள் வழங்கிய வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும்.
எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் இந்த சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் ஜனாதிபதியாகியிருந்தால் டிசம்பரில் அல்லது ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் இந்த சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருந்தேன். மேலும் இதனை காலம் கடத்தக்கூடாது.
தற்போதைய அரச பணியாளர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அநுரவுடன் மோதப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறியிருக்கிறது. எனவே, இந்தப் பொறுப்பை ஊழியர்களே பொறுப்பேற்று முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
