ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் செலவழித்த செலவு அறிக்கையை கையளிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பினர் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவழித்த செலவு பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு வழங்கப்பட்ட காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவழிக்க முடியுமான ஆகக்கூடுதலான தொகை 109 ரூபா என நிர்ணயித்து தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட்டிருந்தது. அத்துடன் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 21 நாட்களில் குறித்த செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது. அதன் பிரகாரம் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் அந்த கால எல்லை முடிவடைந்துள்ளது.
என்றாலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் 38 பேரில் 20பேரே இந்த செலவு அறிக்கையை கையளித்திருப்பதாகவும் அதில் பிரதான வேட்பாளர்கள் யாரும் நேற்று நண்பகல்வரை கையளிக்கவில்லை எனவும் எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. என்றாலும் நேற்றைய தினத்துக்குள் அவர்கள் அனைவரும் அந்த அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளித்திருப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். அவர்கள் அந்த அறிக்கையை கையளிக்காவிட்டால், சட்டத்துக்கு முன் அவர்கள் தவறிழைத்தவர்களாக ஆகுவார்கள்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்கும் தேர்தல் செலவு அறிக்கையை அவர்கள் 10 தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இந்த அறிக்கைகள் தொடர்பில் தேடிப்பார்க்க முடியுமாகிறது. வேட்பாளர்கள் முறைகேடாக வருமானம் ஈட்டி இருக்கிறார்களா அல்லது வேட்பாளர்களுக்கு யாராவது செலவழித்திருந்தால், அவர்கள் வருமான வரி சரியான முறையில் செலுத்தி இருக்கிறார்களா? போன்ற விடயங்கள் இதன் மூலம் தேடிப்பார்க்கப்படும்.
எனவே நேற்றைய தினத்துக்குள் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.