Our Feeds


Wednesday, October 23, 2024

Sri Lanka

மட்டு. சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் கைது



மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குருநாகலைச் சேர்ந்த குறித்த நபர்களான வயது 35, 25 உடைய இருவரையே இன்று (23) கைதுசெய்துள்ளதாக மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.


குருநாகலைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயைக் குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்ராசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார்.


இதனையடுத்து நோய்க்குள்ளானவரும் அவருக்கு உதவியாக இருந்தவருமான இருவரும் குருநாகலில் இருந்து பிரயாணித்து சம்பவதினமான இன்று காலை மட்டக்களப்பை சென்றடைந்து சீயோன் தேவாலயத்துக்குச் செல்ல எண்ணி அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தனர்.


இந்நிலையில், இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு  தெரிவித்ததையடுத்து பொலிஸார் அந்த இடத்துக்குச் சென்று இருவரையும் கைது செய்தனர்.


சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரதும் கைவிரல் அடையாளம் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


(கனகராசா சரவணன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »