அனுபவமற்ற குழு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அது நாட்டுக்கு நல்லதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ருவன் விஜயவர்தன நீர்கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் யார் என்பது கூட மக்களுக்கு தெரியவில்லை என தெரிவித்த விஜயவர்தன, காஸ் சிலிண்டரில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி குழுவில் திறமையும் அனுபவமும் உள்ள குழு இருப்பதாக குறிப்பிட்டார்.
புதிய ஜனநாயக முன்னணியின் நீர்கொழும்பு மக்கள் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது என எமது நம்பிக்கை இருந்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக மக்கள் வேறு முடிவை எடுத்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் கால்களை இழுக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர் எடுக்கும் சில முடிவுகளால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை.
ரணில் விக்கிரமசிங்க , பொருளாதாரம் பற்றிய அறிவினால் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வர முடிந்தது. அன்று அனுர கூறியதையும் இன்று அவர் கூறுவதையும் பார்க்கும் போது முரண்பாடாகவே தெரிகிறது. இந்த தேர்தலில் கூட நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் தமது பொறுப்பை கைவிட வேண்டுமாயின், மீண்டும் நாட்டின் பொறுப்பை ஏற்க அனுபவம் வாய்ந்த அணியொன்று இருக்க வேண்டும் எனவும் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்