“கட்சிகளுக்கிடையில் கொள்கை அடிப்படையிலான வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால், நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சகல எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியாக இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றதாகும். எனவே, இம்முறை பொதுத் தேர்தலில் சர்வசன அதிகாரமாக போட்டியிட தீர்மானித்துள்ளோம். அதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வருகை தந்தபோது, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்டோரினால் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வீதி போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் அசெளகரியத்துக்குள்ளாக்கும் வகையிலும் அந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் விடுதலை முன்னணியே தேசிய மக்கள் சக்தியாக இன்று அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் சகலருக்கும் தெளிவாக தெரியும். எவ்வாறாக இருந்தாலும் நாட்டுக்கு தீங்கு ஏற்படாத வகையில் பொருத்தமற்ற வெளி அதிகார சக்திகளின் தேவைகளை நிறைவேற்றாத வண்ணம் தேசத்தின் ஒற்றுமையை பேணும் வகையில் செயலாற்றினால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அவ்வாறான ஆட்சியை முன்னெடுக்க பிரார்த்திக்கிறோம்.
ஆட்சியமைத்த ஆரம்பக்காலம் சற்று சுவை நிறைந்ததாகவே இருக்கும். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி அமைத்தபோதும் ஆரம்பக் காலம் மிகவும் சுவைநிறைந்தே இருந்தது. எனவே, காலம் செல்ல செல்ல இவர்களின் உண்மை முகம் தெரியவரும். இதற்கு முன்னர் நானும் அந்தக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்துள்ளதால் தவறிழைத்து விடாமலும், மக்களுக்கு பொருத்தமற்ற விடயங்களை மேற்கொள்ளாமலும் பிரிவினைவாதத்துக்கு கப்பம் வழங்காமலும் வெளிநாட்டு விருப்பு வெறுப்புகளை செயற்படுத்தாமலும் நாட்டில் சுயாதீனத்தையும் ஐக்கியத்தையும் பாதுகாத்துக்கொண்டு இந்த பயணத்தை தொடர்வார்களாக இருந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. முழு நாட்டு மக்களும் அதற்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள்.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சர்வசன அதிகாரம் என்ற அடிப்படையில் கலந்துரையாடி வருகிறோம். அதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருகிறோம்.
சகல எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியாக இணைவதற்கான நிலைமை தற்போது இருக்கிறது என்று நாங்கள் கருதவில்லை. ஒவ்வொரு கட்சிகளுக்கும் இடையில் கொள்கைகளின் அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கின்றன. அதனாலேயே சர்வசன அதிகாரம் என்ற அடிப்படையில் இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Tuesday, October 1, 2024
சர்வசன அதிகாரம் தேர்தலில் தனிப்பயணம் - விமல் வீரவங்ச!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »