நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது.
சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
240 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1753 குடும்பங்களைச் சேர்ந்த 6963 பேர் தற்போது 81 பாதுகாப்பு இடங்களில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கம்பஹா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு 20,553 குடும்பங்களைச் சேர்ந்த 82,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் 10,914 குடும்பங்களைச் சேர்ந்த 40,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக களு, களனி, கிங் கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் 5 இடங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.