நாட்டின் பொருளாதாரத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கிவரும் பெருந்தோட்டத் தொழிற்துறை சார்ந்த அமைச்சின் பொறுக்களை ஏற்றுள்ளேன்.
இவற்றுடன் தொடர்புடைய மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் எழுச்சிக்கான வேலைத்திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள பெருந்தோட்ட அமைச்சில் புதன்கிழமை (20) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 14ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணைக்கமைய சுபீட்சமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் ஏற்படுத்துவோம்.
அதற்காக வேலைத்திட்டங்களில் விசேட பொறுப்புக்களை கொண்ட அமைச்சாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு காணப்படுகிறது.
இந்த அமைச்சின் ஊடாக சிறப்பான சேவைகளை மக்களுக்கு வழங்க முடியும் என்று நம்புகின்றோம். இந்த நாட்டில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் சமூகம் இந்த அமைச்சுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இவ் அமைச்சின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும் என்றும் நம்புகின்றோம்.
இலங்கையின் பொருளாதார வரலாற்றில் ஏற்றுமதி வருமானத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் தேயிலை, இறப்பர், தெங்கு தொழிற்துறைகள் இந்த அமைச்சில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எமது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும்.
31 நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் இந்த அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையைக் கொண்டு வரலாற்றிலிருந்து காணப்படும் நிலைமையை மாற்றியமைக்க உறுதி பூண்டுள்ளோம்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய நாடு கட்டியெழுப்பப்படும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம் என்றார்.