பாலஸ்தீனம் - காஸா நிலப்பரப்பில் கடந்த 447 நாட்களுக்கும் அதிகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்தி வரும் அநியாய தாக்குதல்களில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டு சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காஸாவில் இயங்கி வந்த 32 மருத்துவமனைகளையும் இஸ்ரேலிய தாக்குதல்களினால் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 25 லட்சம் மக்கள் தமது வாழ்விடங்களை இழந்து தமது சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ்ந்து வருவதுடன் அவர்களுக்கான உணவு, தண்ணீர், மற்றும் மருந்துகள் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு நடைபெறும் செய்திகளை மிகத் துள்ளியமாக உலகுக்கு எடுத்துக் காட்டிவரும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஏற்க்கனவே அல்-ஜஸீரா உள்ளிட்ட ஊடகங்கள் இஸ்ரேலுக்குள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை சுமார் 201 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 180 க்கும் அதிகமானவர்கள் அல்-ஜஸீராவின் ஊடகவியலாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இன்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடத்திய கொடூர தாக்குதலில் ஒரே நேரத்தில் 5 ஊடகவியலாளர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்திலிருந்து செயல்பட்டு வரும் அல்-குத்ஸ் தொலைக்காட்சியின் செயற்கைக்கோள் ஒளிபரப்பு வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இந்த ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.