சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு விரிசல் ஏற்படும் விதத்திலான கருத்துக்கள் தெரிவிப்பதை பொறுப்பு வாய்ந்தவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கிருக்கின்ற சிறப்புரிமையின் அடிப்படையில் பாராளுமன்ற விவாதங்களின்போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுவது வழமையான நிகழ்வாகும். என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்- இராமநாதன் அர்ச்சுனா ஆகிய இருவருக்கிடைலான கருத்து மோதலை பாராளுமன்றத்துக்கு வெளியே கொண்டு வந்து ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்து அதை சமூக மயப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியதாகும். இது ஈழத்தமிழர்களினதும் மலையகத்தமிழர்களினதும் உறவு நிலையில் விரிசலை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்து விடலாம்.
1948ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு காரணமாக இருந்த சட்டத்திற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமையால் இரு சமூகங்களும் மிக நீண்ட காலமாக பகை முரண்பாடுகளுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தந்தை செல்வா போன்ற வடக்கு தலைவர்களின் அரசியல் செயற்பாடுகளே இரண்டு சமூகங்களுக்கிடையிலான விரிசலை ஒரளவு குறைத்திருந்தது.
1980களுக்கு பின் வடக்கு - கிழக்கு தலைமை இளைஞர்களின் கைகளுக்கு மாறியபோது பிரதேசவாதம் வலுவிழந்தது. ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர் தோழர் இரட்னசபாபதியின் தீர்க்கதரிசனமான பார்வை போராட்டத்தில் மலையகத்தையும் இணைத்துக் கொண்டபோது மலையகத் தமிழர்களும் போராட்டத்தில் பங்காளியானார்கள்.
இறுதியுத்ததில் மலையகத்திலிருந்து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்திருந்த மலையகத் தமிழர் இறுதிவரை போராட்டக் களத்தில் நின்றதை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா போன்றவர்கள் மறந்து விடக்கூடாது.
அமைச்சரோடு பிரச்சினையென்றால் அவரோடு விவாதித்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து "கப்பலில் வந்தவர்" என்று அவர் சார்ந்த சமூகத்தை இழிவுபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
200 வருடங்களுக்கு முன் கப்பலில் வந்தவர்கள் தான் இன்று வரை இந்த நாட்டை பொருளாதார ரீதியாக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் கப்பலில் வந்த மலையகத் தமிழர்களின் உழைப்பில் தான் நாட்டிலுள்ள மிக அதிகமான மக்கள் இலவசக் கல்வி, இலவச மருத்துவத்தை அனுபவித்தனர். அதில் சிலநேரம் ஒரு சமூகத்தை இழிவுபடுத்த எத்தனிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் உள்ளடங்கியிருக்கலாம் .
அத்தோடு இன்று புலம்பெயர்ந்து வாழும் வட - கிழக்கு சமூகம் மலையக கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். எதிர்காலத்தில் பல்வேறு வகையான உதவிகளை செய்யத் தயாராகவுள்ளனர்.
இந்த நிலையில் சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் மலையக இளம் தலைமுறையினர் விழுந்து விடக்கூடாது.
சமூக ஊடகங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவுக்கு பதில் சொல்லுவதாக நினைத்து அவர் சார்ந்த சமூகத்தை நீங்கள் இழிவுப்படுத்தி விடக்கூடாது. அவருக்கான பதிலை ஈழத்தமிழர்களே வழங்கவேண்டும்.
அதுவே இரு சமூகங்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லடி செய்தியாளர்