Our Feeds


Thursday, February 13, 2025

Zameera

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?


 சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். அதனால் தான் நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் குரங்குகள் மீது பழிசுமத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கடந்த அரசாங்கத்தில் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் காணப்பட்டன. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீன விஜயத்தின் போது இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம். இதன் பின்னணியில் தான் சகல பிரச்சினைகளுக்கும் குரங்குகள் மீது பழிசுமத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.


மின்சாரத்துக்கான கேள்வி மற்றும் விநியோகத்தில் காணப்படும் சிக்கலே இதற்கான காரணமாகும். நுரைச்சோலையில் மின் பிறப்பாக்கிகள் 3 செயலிழந்துள்ளமையால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 900 மெகாவோல்ட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. அவ்வாறெனில் அரசாங்கம் முதலில் இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும். மின் சக்தி அமைச்சர் பொறியியலாளர் எனக் கூறுவது நகைச்சுவையாகவுள்ளது.


இவ்வாறு சமநிலையற்ற தன்மை தொடர்பில் மின்சாரசபை பொறியியலாளர்களால் முன்னரே அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இவர்களுக்கு சிறந்த அரசியலில் ஈடுபட முடியும். ஆனால் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. ஆட்சி நினைத்ததைப் போல அன்றி, மிகவும் கடினமாகவுள்ளதாக ஜே.வி.பி.யினர் குறிப்பிடுகின்றனர் என்றார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »