1948 முதல் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தில் மலையக தமிழர்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை. இதுவே இன்றைய பிரச்சினைக்கு பிரதான காரணியாக உள்ளது. ஆகவே, எல்லை நிர்ணயம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியுமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தினார்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், நாமல் ராஜபக்ஷ மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் செவ்வாய்க்கிழமை (04) பாராளுமன்றத்தில் உரையாற்றி விசேட கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்கள். மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹட்டன் - செனன் தோட்டத்தில் கே.எம். பிரிவில் 100 பேர் வாழ்கிறார்கள். 26 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரையில் இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
நான் நேரடியாகச் சென்று தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். எம்மால் இயலுமான வகையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பெருந்தோட்ட பகுதிகளில் சுமார் 3,500 வீடுகள் தீ மற்றும் இதர அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. தீ விபத்தினை அனர்த்தத்துக்குள் உள்ளடக்க முடியாது என்ற தவறான கொள்கை நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக வீடுகளில் வசிக்கிறார்கள்.இவர்களுக்கு நிலையான தீர்வு கிடைக்கவில்லை என்றார்.