அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்களுக்கு எதிராக ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்த்து கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைக்க முயன்றனர். மேலும், லொஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 400 பேரை லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, கலிபோர்னிய ஆளுநரின் எதிர்ப்பை மீறி, சுமார் 4,000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களையும், இராணுவத்தின் ‘மரைன்’ பிரிவைச் சேர்ந்த 700 வீரர்களையும் ட்ரம்ப் அனுப்பி வைத்தார்.
இத்துடன், ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் லொஸ் ஏஞ்சல்ஸில் மட்டுமின்றி, ஒஸ்டின், சிக்காகோ, டல்லாஸ், நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.