நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை மறுத்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் இடையில் இதுபோன்ற எந்த கலந்துரையாடலும் நடத்தப்படாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலையை விதிப்பது குறித்து ஆலோசனைகளைப் பெறுவதற்காக, நுகர்வோர் விவகார அதிகார சபையின் சுயாதீனமாக இயங்கிவரும் நுகர்வோர் விவகார சபையானது உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
அந்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை கவனத்திற்கொண்டு, குறித்த கலந்துரையாடலில் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க முடிவு செய்தால், அந்த விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தெரிவிக்க சபை நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த விலைகளை வர்த்தமானி அறிவிப்பில் வெளியிட அதிகாரசபை நடவடிக்கை எடுக்கும், மேலும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் ஊடகங்களுக்கு முன்வைத்த விலையும் அதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை இணக்கம் வௌியிட்டதாக வௌியான செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளரின் தகவல் மற்றும் சில்லறை விலை இல்லாமல் பொதியிடப்பட்ட உப்பை சந்தைக்கு வெளியிட இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அத்தகைய தயாரிப்புகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும், எனவே அனைத்து வர்த்தகர்களும் அத்தகைய பொருட்களை வாங்கி விற்க வேண்டாம் என்றும் நுகர்வோர் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அனைத்து வணிகர்களும் தங்களுக்கு பொருட்களை வழங்கிய இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் சரியான தகவல் மற்றும் விலைகளுடன் கூடிய முறையான விலைப்பட்டியலை வைத்திருக்க வேண்டும் எனவும், அத்தகைய விலைப்பட்டியல் இல்லாமல் பொருட்கள் வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.