அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த
டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்பவர் 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானதோ அரசியல் நோக்கம் கொண்டதோ அல்ல என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.மோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிதி நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளரான டபிள்யூ.எம். அதுல திலகரத்ன 4 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.
மோசடி வழக்கு தொடர்பில் அதுல திலகரத்னவுக்கு எதிராக நீதிமன்றினால் 2 மில்லியன் ரூபா அபராதமும் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஆனால் வெசாக் பொதுமன்னிப்பின் கீழ் அதுல திலகரத்னவுக்கு எதிரான அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதுல திலகரத்னவுக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை குறைத்தல் ஆகியவை காரணமாக ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு அதுல திலகரத்ன தகுதி பெற்றுள்ளார்.
எனவே, அதுல திலகரத்ன ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானதோ அரசியல் நோக்கம் கொண்டதோ அல்ல என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.