கற்பிட்டி பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் மொகமட் றிகாஸ், பிரதித் தவிசாளராக சமன் குமார் ஹேரத்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பிரதேச சபைக்கு 32 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்களை எந்த கட்சியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் தவிசாளர் தெரிவு இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.
அதன்படி இரகசிய வாக்கெடுப்பு மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதில் 16 உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் மொகமட் றிகாஸ் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டதுடன்,
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மொஹமட் இப்றாஹீம் மொஹமட் ஆசிக் 15 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தோல்வியை தழுவினார்.
உப தவிசாளர் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றதுடன், இதில் 32 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதில் 17 உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் சமன் குமார ஹேரத் தெரிவு செய்யப்பட்டதுடன், அவரை எதிர்த்து போட்டியிட்ட பொதுஜன பெரமுன ஹாரூன் 15 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தோல்வியை தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
