Our Feeds


Saturday, June 28, 2025

Sri Lanka

பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் - விமல் விசனம்


யுத்தத்தில் விடுதலைப் புலிகளால் இராணுவத்தினரும், பொலிஸாரும், சிங்கள மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் மனித உரிமைகள் மீறப்படவில்லையா, இவர்களை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நினைவுகூரவில்லை. நவநீதம் பிள்ளை,செய்ட் அல் ஹுசைன் ஆகியோரை போன்று உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்துள்ளார். இவரது செயற்பாடு வன்மையாக கண்டித்தக்கது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு வருகைத் தந்தார். அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாகவே உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகைத்தந்தார்.

இலங்கை தொடர்பில் தீர்மானமிக்க தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்கள் இலங்கைக்கு வருகைத்தருவார்கள்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை யுத்தம் முடிவடைந்தவுடன் இலங்கைக்கு வருகைத் தந்தார்.பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்து விட்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்தார்.

அதேபோல் 2016 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செய்ட் அல் ஹுசைன் இலங்கைக்கு வருகைத் தந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுடன் சந்திப்புக்களை நடத்தினார்.

இவருக்கு எதிராக பேரணி சென்றதற்காக எம்மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கு இன்றுவரை விசாரணையில் உள்ளது. இவரும் இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்ப்பித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர்களான நவநீதம் பிள்ளை,செய்ட் அல் ஹுசைன் ஆகியோர் பின்பற்றிய  கொள்கையை முழுமையாக பின்பற்றி தற்போதைய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், விடுதலை புலிகள் அமைப்பு கொள்கையுடைய இனவாதிகளை மாத்திரம் சந்தித்தார்.

உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்துக்கு சென்று விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தியிருந்தவர்களுடன் ஒன்றிணைந்து முன்னாள் போராளிகளின் நினைவிடங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதேபோன்று செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.இவர் எவ்வாறு நடுநிலையாக செயற்படுவார் என்பது அதனூடாக வெளிப்பட்டது.

யுத்தத்தில் விடுதலைப் புலிகளால் இராணுவத்தினரும், பொலிஸாரும், சிங்கள மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் மனித உரிமைகள் மீறப்படவில்லையா, இவர்களை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நினைவுகூரவில்லை.

யுத்தத்துக்கு தலைமை தாங்கிய பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய உயரதிகாரிகள் உயர்ஸ்தானிகரை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. 

இனவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்து விட்டு உயர்ஸ்தானிகர் சென்றுள்ளார். இவரது செயற்பாடு வன்மையாக கண்டித்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »