போலி இந்திய கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி
அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
நேற்றையதினம் இரவு 09.45 மணிக்கு அபுதாபிக்குப் புறப்படவிருந்த EY-397 என்ற எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பயணிகள் முனையத்தில் காத்திருந்தபோது, அவர்களின் அசாதாரண நடத்தையினை கவனித்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களின் பயணபைகளை சோதனையிட்டபோது, இரண்டு போலி இந்திய கடவுச் சீட்டுக்களையும் இரண்டு போலி இத்தாலிய விசாக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களும் எல்லை கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளினால் தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவை போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், மேலதிக விசாரணைக்காக இருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.