Our Feeds


Saturday, June 21, 2025

SHAHNI RAMEES

அரசாங்கம் இன்று மக்களை மறந்து, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவதற்காக மாத்திரம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது!

 


கொழும்பு மாநகரசபையில் திறந்த வாக்கெடுப்பு

நடத்தப்பட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். அரசாங்கத்தின் டீல் அரசியல் மற்றும் அரசாங்கத்துக்கு பக்க சார்பாக நடந்து கொண்ட மேல் மாகாண ஆணையாளரால் மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


கொழும்பில்  சனிக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,



கொழும்பு மாநகரசபையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் நாம் 54 வாக்குகளைப் பெற்றுக் கொண்டோம். திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். 


அரசாங்கத்தின் டீல் அரசியல் மற்றும் அரசாங்கத்துக்கு பக்க சார்பாக நடந்து கொண்ட மேல் மாகாண ஆணையாளரால் மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.


இதற்கு முன்னர் இரகசிய வாக்கெடுப்புக்களை முற்றாக நிராகரித்த ஜே.வி.பி. இன்று மோசடிக்காக அதனை ஊக்குவிக்கின்றது. அதிகாரத்துக்காக தமது கொள்கைகளையே இவர்கள் காட்டிக் கொடுத்துள்ளனர். 



மேல் மாகாண ஆணையாளரின் அரசியல் பக்கசார்பு மற்றும் சர்வாதிகார செயற்பாடுகள் தொடர்பில் எமது சட்ட ஆலோசனைக்குழு விசேட அவதானம் செலுத்தியிருக்கிறது.


அவர் முற்றுமுழுதாக உள்ளுராட்சிமன்ற சட்டத்துக்கு முரணாகவே செயற்பட்டிருக்கின்றார். அத்தோடு பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்ட  வழிகாட்டல்களையும் அவர் பின்பற்றவில்லை. 


தன்னிச்சையாகவே அவரால் முடிவுகள் எடுக்கப்பட்டன. எனவே அவருக்கெதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுப்போம். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.


காலியில் பொதுஜன பெரமுனவும், நுவரெலியாவில் தொண்டமானும், அநுராதபுரம் மற்றும் குருணாகலில் ரிஷாத் பதியுதீனுடைய கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர். 


அது மாத்திரமின்றி மட்டக்களப்பில் பிள்ளையானுடைய ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.


 அரசாங்கம் இன்று மக்களை மறந்து, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவதற்காக மாத்திரம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »