Our Feeds


Friday, June 27, 2025

Sri Lanka

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் இருந்தவர்கள் இன்று உயர் பதவிகளில் - நாமல்!


தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் இருந்தவர்கள் இன்று பொலிஸ் பிரிவில் உயர் பதவிகளில் உள்ளார்கள். பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. நீதிமன்றத்தின் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (27) வழக்கு விசாரணைக்கு முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் ஊழலை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தெரிவு செய்த அடிப்படையில்  செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஊழல் ஒழிப்பு அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் அரசியல்வாதிகளுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு அலுவலகத்தின் பணிப்பாளராக செயற்பட்டவர் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் அமைச்சராக உள்ளார்.

இந்த அலுவலகத்தில் இருந்து மாதச் சம்பளம் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.தற்போது கொடுப்பனவு மாத்திரம் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடுகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் இருந்தவர்கள் இன்று பொலிஸ் பிரிவில் உயர் பதவிகளில் உள்ளார்கள்.  பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

நீதிமன்ற கட்டமைப்பின் மீது எமக்கு முழுமையான நம்பிக்கையுள்ளது. இந்த அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்தும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.


(இராஜதுரை ஹஷான்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »