ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி ஒருசில சிறைக்கைதிகள் வெசாக் தினத்தன்று விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் இவ்விடயம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அநுதாரபுரம் மேல் நீதிமன்றத்தால் 2025.05.02 ஆம் திகதியன்று சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிக்கு 2025.05.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட விவகாரம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி செயலகம் சனிக்கிழமை (7) தெளிவுப்படுத்தல் ஊடக அறிக்கை ஒன்றை வெளிட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தது. இந்த முறைப்பாடு குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சிறைகைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இதன்போது சிறைகைதிகள் பலருக்கு முறையற்ற வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக 2025.06.06 ஆம் திகதியன்று ஜனாதிபதி செயலகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் அளித்துள்ள முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் இவ்விடயம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஆவணங்களை பரிசீலனை செய்து உரிய தரப்பினரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி ஒருசில சிறைக்கைதிகள் வெசாக் தினத்தன்று விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட சிறைக்கைதிகளுடன் அனுமதியளிக்கப்படாத அல்லது பெயர்குறிப்பிடப்படாத கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
