Our Feeds


Friday, June 20, 2025

Sri Lanka

தோல்விகளின் மும்மூர்த்தியாகியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் - அமைச்சர் சந்திரசேகர்!


எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று தோல்விகளின் மும்மூர்த்தியாகியுள்ளார். உள்ளுராட்சிமன்றங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பததை தடுப்பதற்கு தமது கொள்கைகளை காட்டிக் கொடுத்து கள்வர்களுடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் எமக்கெதிரான எந்தவொரு சதித்திட்டமும் வெற்றியளிக்கவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று தோல்வியின் மும்மூர்த்தியாகியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலில் மாத்திரமின்றி தற்போது உள்ளுராட்சிமன்றத் தேர்தலிலும் படுதோல்வியடைந்துள்ளார். எந்த வகையிலேனும் கொழும்பு மாநகரசபையில் நாம் ஆட்சியமைப்போம் என்று கடந்த இரு வாரங்களாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதற்காக முன்னெடுத்த அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் தோல்வியடைந்தனர்.


இலங்கையில் தேர்தல் வரலாற்றில் சஜித் பிரேமதாச தோல்விகளின் தந்தையாகியுள்ளார். கடந்த தேர்தல்களின் போது இவர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷர்கள் கள்வர்கள் என்றே பிரசாரங்களை முன்னெடுத்தனர். தேசிய மக்கள் சக்திக்கு எதிராகவும் கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்தனர். ஆனால் இன்று கட்சியின் உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத நிலைமையை அடைந்துள்ள சஜித் பிரேமதாசவை, அவரது கட்சியினரே வெறுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


எமக்கு எந்தளவு இடையூறு விளைவிக்கப்பட்டாலும் எமது முன்னேற்றப் பாதையை இவர்களால் தடுக்க முடியாது. நாம் மக்களுக்காகவே இந்த ஆட்சியை அமைத்துள்ளோம். மக்களுக்காகவே நாம் சேவையாற்றுகின்றோம். ஆனால் இவர்கள் தமது கொள்கைக்கு அப்பால் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணிந்திருக்கின்றனர். இவர்களுக்கென நிரந்தர கொள்கையும் கிடையாது. தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாத்திரமே இவர்களுக்கு காணப்படுகிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »