Our Feeds


Monday, June 23, 2025

SHAHNI RAMEES

ஈரான் Vs இஸ்ரேல் மோதல் : அரசாங்கத்தின் முன்னாயத்த திட்டங்கள் என்ன? பிரதான எதிர்க்கட்சி கேள்வி

 

ஈரான் - இஸ்ரேல் மோதலானது இலங்கை போன்ற சிறிய நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடியாக பாதகமான தாக்கத்தை செலுத்தும். அவற்றை எதிர்கொள்வதற்கு இப்போதிருந்தே முன்னாயத்தங்களை செய்ய வேண்டும். ஆனால் அராசங்கத்திடம் அவ்வாறு எவ்வித முன்னாயத்தங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஈரான் - இஸ்ரேல் மோதல் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி துறையில் நேரடியாக பாதகமான தாக்கத்தை செலுத்தும். 


எமது நாட்டின் தேயிலை ஏற்றுமதியில் ஈரான் முன்னிலையிலுள்ளது. அது மாத்திரமின்றி மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகத்தில் ஈரான் பிரதான பங்கினை வகிக்கிறது. மறுபுறம் இஸ்ரேலில் அதிகளவான இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர்.

இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களால் எம்மைப் போன்ற சிறிய நாடுகளின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படும். 

அத்தோடு டொலர் நெருக்கடியும் ஏற்படும். எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  

இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது எனக் கேள்வியெழுப்புகின்றோம்.

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் அரசாங்கம் அரச வருவாயில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையவுமில்லை. அதேவேளை பொருளாதார வளர்ச்சி வேகம் 4.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

2026ஆம் ஆண்டாகும் போது இது 3 சதவீதமாக வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இவ்வாறிருக்கையில் 2027ஆம் ஆண்டின் பின்னர் நாம் எவ்வாறு வாக்குறுதியளித்தவாறு கடன் மீள செலுத்துவோம்?


உலக யுத்த நிலைமையும், அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவும் இலங்கைக்கு சிறந்த வாய்ப்பாகும் என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குறிப்பிடுகின்றார்.

அது எவ்வாறு என்று எமக்கு புரியவில்லை. எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் ஏனைய அனைத்து பிரச்சினைகளும் இயல்பாகவே அதிகரிக்கும். தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது. 

இது எவ்வாறு இலங்கைக்கு சாதகமாகும்? அரசாங்கத்தின் அறிவற்ற கருத்துக்களால் இறுதியில் நாட்டு மக்களே பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »