Our Feeds


Thursday, July 3, 2025

SHAHNI RAMEES

சுமார் 1000 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளன : நளிந்த ஜயதிஸ்ஸ

 

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துறைமுகங்களில் கொள்கலன்களை விடுவிப்பதில் நெறிசல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இதற்கு முன்னர் 14 சந்தர்ப்பங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் எவ்வித பரிசோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகள் மீளாய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கொள்கலன் விடுவிப்பில் அமைச்சர்களால் அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும். அவ்வாறு எங்கும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு சிலரால் எவ்வித அப்படையுமின்றி இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சிவப்பு நிற லேபல் ஒட்டப்பட்ட கொள்கலன்கள் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மஞ்சள் நிற லேபல் ஒட்டப்பட்டவை ஸ்கேன் பரிசோதனைக்கு அல்லது அவற்றிலுள்ள பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பச்சை நிற லேபல் ஒட்டப்பட்டவை பரிசோதனைகள் இன்றி பரிசோதனைகள் இன்றி, ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விடுவிக்கப்படக் கூடியவையாகும்.

நாட்டில் வருட இறுதியில் அல்லது புத்தாண்டு காலத்தில் கொள்கலன் விடுவிப்பில் இவ்வாறான நெறிசல்கள் ஏற்படுவது இயல்பானதாகும். சுங்க பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும் குழுவின் பரிந்துரைக்கமையவே கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும்.


இந்நிலையில் அண்மையில் எவ்வித பரிசோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொள்கலன்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியதால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனவரி 30ஆம் திகதி ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. திறைசேரியின் பிரதி செயலாளர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவினால் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. கொள்கலன் விடுவிப்பினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஸ்திரமாகக் கூற முடியாது. சுங்க பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய இதற்கு முன்னர் இவ்வாறு 14 சந்தர்ப்பங்களில் சுமார் 1000க்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவற்றால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா அல்லது அரசாங்கத்தின் நிதி நிலைமையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு கணக்காய்வொன்று நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோன்று எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கான பரிந்துரைகளும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் அறிக்கையை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர் அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.


கொள்கலன் நெறிசல் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பான மாற்றுவழியொன்று நாட்டில் இல்லை. இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் போது எடுக்கப்படக் கூடிய தீர்மானங்கள் தொடர்பில் பரிந்துரைப்பதற்காகவே சுங்க பணிப்பாளரால் குழுவொன்று நியமிக்கப்படுகிறது. அதற்கமையவே கொள்கலன்கள் விடுவிக்கப்படுகின்றன என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »