Our Feeds


Tuesday, July 22, 2025

Sri Lanka

பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - சஜித்!



அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இடையீட்டு கேள்வி ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம்  பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ள கட்டளைச் சட்டத்தின் ஊடாக வேலையாட்களுக்கான குறைந்தபட்ச வேதனத்தை டிசம்பர் முதல், 21,000 ரூபா முதல் 27,000 ரூபா வரையிலும், ஜனவரி மாதம் முதல் அதை 30,000 ரூபாவாக அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நல்லதொரு விடயமென்பதால் இதற்கு எதிர்க்கட்சியின் ஆதரவைத் தருகிறோம்.

அரசாங்கம், "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்ற தனது கொள்கை அறிக்கையில் பிரிவு 41இன் கீழ் மலையக தோட்டங்களில் பணிபுரியும் சமூகத்தினரது அன்றாட வேதனத்தை  1,700 ரூபாவாக அதிகரிப்போம் என வாக்குறுதிகள் வழங்கியிருந்தபோதிலும், இன்று அந்த வாக்குறுதியை மறந்துவிட்டுச் செயல்படுகிறது.

1941ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க ஊதிய கட்டளைச் சட்டத்தின் பிரிவு 20 (1)இன் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள  தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது குறித்து காணப்படுகின்றது.

1981ஆம் ஆண்டின் 72ஆம் இலக்க பெருந்தோட்ட  கொடுப்பனவுச் சட்டம் 4ஆம் பிரிவின் கீழ் தோட்டச் சமூகத்திற்கு சம்பள நிர்ணய சபை எடுக்கும் முடிவின் அடிப்படையில் செலுத்த வேண்டிய தொகை தீர்மானிக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் குறிப்பிட்டதொரு வேலையாட்களுக்கு குறைந்தபட்ச வேதனம் டிசம்பர் முதல், ரூ. 21,000 முதல் ரூ. 27,000 வரையிலும், ஜனவரி மாதம் முதல் ரூ.30,000ஆக அதிகரிக்கப்படும் போது மலையகம் பெருந்தோட்ட தாழ்நில சிறு தோட்ட சமூகத்தை மறந்துவிட்டனர்.

தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்களில் ஈடுபட்டுள்ளவர்களும் காணப்படுகின்றனர். முறையான கணக்கெடுப்புக்கு ஏற்ப, அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் மிகக் குறைந்த அளவை மாத்திரமே நிறைவேற்றியுள்ளது.

அதனால் தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பதை நாம் அறிய விரும்புகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இராதா கிருஷ்ணன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை சம்பளம் 1700 ரூபா என்ற வாக்குறுதியை செயற்படுத்தும் திருத்தம் ஒன்றை முன்வைப்பதனால், இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »