Our Feeds


Tuesday, July 1, 2025

SHAHNI RAMEES

செம்மணி புதைகுழி! - Ai படங்களை உருவாக்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டத்தரணி ரனித்தா

 

செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்புக் கூடுகளை Ai தொழில்நுட்பத்தின் ஊடாக மாற்றி அமைப்போருக்கும், அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழியில் காணப்படும் எலும்புக் கூடுகளை வைத்து, Ai தொழில்நுட்ப உதவியுடன் படங்கள் உருவாக்கப்பட்டு, அவை சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

குற்றவியல் நடவடிக்கையாக நீதிமன்ற நடவடிக்கை ஊடாக விசாரணையில் இருப்பதனால் போலியாக உருவாக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதனால், அவை குற்றவியல் விசாரணைக்கு தடையை ஏற்படுத்துகின்றன. 


அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் உருவ அடையாளங்கள் மாற்றப்பட்டு, வழக்கினை பிழையாக திசைதிருப்பிக் கொண்டுசெல்வதற்கான உத்தியாக இதனை கையாள்கின்றனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான படங்களை உருவாக்குபவர்கள் மற்றும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றோம்.

இனி வரும் காலங்களிலும் அவ்வாறான படங்கள் உருவாக்கப்பட்டு, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வோருக்கு எதிராக, குற்றவியல் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் எனவும், நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகளில் தலையீடு செய்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


எனவே, இந்த வழக்கு விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார். 






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »