Our Feeds


Sunday, July 13, 2025

SHAHNI RAMEES

இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி?

 

செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியதாகவும், அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செம்மணி விவகாரத்தில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டமுடியும் எனத் தெரிவித்தார்.

செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சர்வதேச தடயவியல் நிபுணர்களின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் பின்னணியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.


'செம்மணி மனிதப்புதைகுழி என்பது சாதாரணமானதொரு விடயமல்ல. அது ஏற்கனவே சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருந்த ஒரு விடயமாகும். கிருஷாந்தி குமாராசுவாமியின் படுகொலை தொடர்பான விசாரணைகளை அடுத்து 1999 ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

அதன் பின்னர் சர்ச்சைக்குரிய அந்த மனிதப்புதைகுழி விவகாரம் தொடர் விசாரணைகளின்றி இடைநடுவே முடக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதும்கூட செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது தற்செயலாகத்தான் இந்த மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கப்போவதில்லை' என அவர் குறிப்பிட்டார்.


அதேவேளை உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவத்தைப் பொறுத்தமட்டில், அவ்வேளையில் ஆட்சிபீடத்தில் இருந்த மற்றும் அதனைத்தொடர்ந்து ஆட்சிபீடமேறிய தரப்பினர் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான தரப்பினர் என்பதனால், அதுகுறித்த உண்மைகளை வெளிக்கொணரவேண்டிய தேவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தையும், இனவழிப்பையும் அப்போதைய அரசாங்கங்களுடன் இணைந்து ஊக்குவித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி, அக்காலப்பகுதியில் உருவான செம்மணி போன்ற மனிதப்புதைகுழிகள் தொடர்பில் எவ்வாறு நீதியான விசாரணைகளை முன்னெடுக்கும்? எனக் கேள்வி எழுப்பினார்.

ஆகவே செம்மணி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சர்வதேசத்தின் தலையீடோ அல்லது சுயாதீன சர்வதேச விசாரணையோ இன்றி, அதுகுறித்த உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவே முடியாது என்று தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »