எரிபொருளுக்கு அறவிடப்படும் வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஆட்சிக்கு வர முன்னர் அரசாங்கம் கூறினாலும், அதனை செய்யாது தொடர்ந்தும் எரிபொருள் லீட்டரொன்றுக்கு பெருமளவில் வரியை அறவிடுகின்றது. இந்த வரி நிவாரணம் மக்களுக்கு எப்போது வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, வலுச் சக்தி அமைச்சரிடம் கேள்வியெழுப்பி தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் கொள்வனவின் போது ஒவ்வொரு லீட்டருக்கும் பெருமளவான தொகை முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பைகளுக்குள் போவதாக குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ன. அது இப்போதும் நடக்கின்றதா? என்று கேட்கின்றேன்.
அத்துடன், ஒவ்வொரு மாதமும் விலை சூத்திரம் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் இவ்வாறு நடந்தது. ஆனால் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் எரிபொருள் இறக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் உள்ளன.
அதாவது ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரொன்று 161.18 ரூபாவுக்கே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 120.42 ரூபா மக்களிடம் வரியாக அறவிடப்படுகிறது.
இதுவே கஞ்சன விஜேசேகரவின் பைகளுக்குள் போவதாக கூறப்பட்டது. அத்துடன் ஒக்டேன் 95 பெட்ரொல் 154.39 ரூபாவுக்கு கொண்டு வரப்படுவதுடன், 145.29 ரூபா வரி அறவிடப்படுகிறது. ஒட்டோ டீசல் 185.67 ரூபாவுக்கு கொண்டுவரப்படுவதுடன், 97.47 ரூபா வரி அறவிடப்படுகிறது. அதேபோன்று சூப்பர் டீசல் 157.84 ரூபாவுக்கு கொண்டு வரப்படுவதுடன், 120.67 ரூபா வரி அறவிடப்படுகிறது.
இந்த வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறப்பட்டது. அது எப்போது செய்யப்படும் என்று கேட்கின்றோம். இதில் இன்னும் மோசடி நடக்கின்றதா என்று கேட்கின்றேன் .
அத்துடன் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. அத்துடன் டொலர் பெறுமதியும் குறைந்திருந்தது. இவ்வாறு உலக சந்தையில் எரிபொருள் விலை உயராமல் இருக்கும் நிலையில், 3 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருக்குமாக இருந்தால் ஏன் ஜூலை மாதத்தில் எரிபொருள் விலையை அதிகரித்தீர்கள்.
ஏன் மக்களின் வயிற்றில் அடித்தீர்கள். அதனால் சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள. இது நிவாரணம் வழங்க வேண்டிய நேரம்தானே என்றார்.
